ஹரியானா மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சவுதாலா, தனது 89வது வயதில் மாரடைப்பால் குர்கானில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலமானார்.

இந்தியாவின் 6வது துணைப் பிரதமரான சவுத்ரி தேவி லாலின் மகனான ஓம் பிரகாஷ் சவுதாலா, 1935 ஜனவரி 1ம் தேதி பிறந்தார்.

இந்திய தேசிய லோக்தளத்தின் (INLD) தலைவராக ஒரு செல்வாக்கு மிக்க இந்திய அரசியல்வாதியாக இருந்துவந்தார் சவுதாலா.

துணைப் பிரதமராக தேவிலால் பொறுப்பேற்ற பின் ஹரியானாவின் 7வது முதலமைச்சராக 1989 டிசம்பரில் பொறுப்பேற்ற சவுதாலா ஆறு மாதத்திற்குள் சட்டமன்றத்தில் தேர்வு செய்யப்படாததை அடுத்து 1990 மே மாதம் பதவி இழந்தார்.

பின்னர் இடைத்தேர்தலில் நின்று வெற்றிபெற்ற சவுதாலா 1990 முதல் 1991 வரை ஹரியானா முதல்வராக மீண்டும் பதவி வகித்தார்.

87 வயதில் டெல்லியின் திகார் சிறையில் அடைக்கப்பட்ட மிக வயதான கைதி என்ற சாதனையையும் சவுதாலா ஏற்படுத்தியுள்ளார்.

1999-2000 க்கு இடையில் ஹரியானாவில் ஜூனியர் அடிப்படை ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான ஊழலுக்காக 2013 இல் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டார். அவர் ஒன்பதரை ஆண்டுகள் சிறைவாசத்திற்குப் பிறகு ஜூலை 2021 இல் திகார் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.