டில்லி:
பிரபல வாடகை டாக்சி நிறுவனமான ஓலா நிறுவனத்தில் ரூ.650 கோடி முதலீடு செய்துள்ளார் ஃபிளிப்கார்ட் நிறுவனத்தில் இருந்து விலகிய முன்னாள் இணை நிறுவனர் சச்சின் பன்சால்.
ஃபிளிப் கார்ட் நிறுவனத்துடன் வால்மார்ட் நிறுவனமும் இணைந்து இந்தியாவில் சில்லரை வணிகத்தில் இறங்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் காரணமாக அதிருப்தி அடைந்த ஃபிளிப் கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனராக இருந்த சச்சன் பன்சால் ஃபிளிப் கார்ட் நிறுவனத்தில் இருந்து வெளியேறினார்.
தனது பெயரிலான பங்குகளை விற்பனை செய்துவிட்டு, அந்த பணத்தை ஓலா நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். சச்சின் பன்சால் ரூ.650 கோடி முதலீடு செய்திருப்பதாக அறிவிக்கப்பட் டுள்ளது. இதன் காரணமாக ஓலா நிறுவனம் போட்டிகளை சமாளிக்கும் வகையில் தனது சேவையை இன்னும் அதிகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாடகை கார் சேவை துறையில் உபெர் – ஓலா நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அதனை எதிர்கொள்ளும் விதத்தில் கூடுதலாக 100 கோடி டாலர் முதலீட்டை ஈர்க்கும் இலக்கின் ஒரு பகுதியாக இந்த முதலீட்டை ஓலா பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கூறியுள்ள பன்சால், ஓலாவுடனா பயணம் திரில்லாகவும், மகிழ்ச்சியுடனும் இருப்பதாகவும், எங்கள் அனைவருக்கும் வெற்றி முக்கியமானது என்றும் கூறி உள்ளார்.
அதுபோல, சச்சின் பன்சால் ஓலாவில் முதலீடு செய்திருப்பது குறித்து கூறிய ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால், ஓலாவிர் ஒரு முதலீட்டாளராக சச்சின் பன்சல் சேர்ந்திருப்பதற்கு தனக்கு உற்சாகமாக இருக்கிறது. இதை நான் வரவேற்கிறேன் என்றும், சச்சின் ஒரு தலைசிறந்த நிர்வாகி அவரது உத்வேகத்தை அளித்துள்ளது. எங்கள் அனைவருக்கும் வெற்றி முக்கியமானது என்று கூறி உள்ளார்.
ஏற்கனவே, நன்னடத்தை குற்றச்சாட்டு புகார் தொடர்பாக ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர்களில் ஒருவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான பின்னி பன்சாலும் தனது பதவியை ஏற்கனவே ராஜினாமா செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது.