சென்னை: தமிழ்நாடு பாஜக துணைத்தலைவராக முன்னாள் திமுக எம்.பி. கே.பி.ராமலிங்கம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை மாநில பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ளார்.

திமுகவின் மாநிலங்களவை முன்னாள் உறுப்பினராகவும், விவசாய அணி செயலாளராகவும் இருந்தவர் கே.பி.ராமலிங்கம்.  இவர் கொரோனா விஷயத்தில், திமுகவுக்கு எதிராக கருத்து கூறினார். இதன் காரணமாக கடந்த 2020ம் ஆண்டு அவரை கட்சியில் இருந்து திமுக தலைமை நடவடிக்கை எடுத்தது. இதையடுத்து, அவர் பாரதியஜனதா கட்சியில் இணைந்தார். அவருக்கு பாஜகவின் மாநில செயற்குழு சிறப்பு அழைப்பாளர் பதவி வழங்கியது பாஜக தலைமை.

இதையடுத்து பாஜகவுக்காக பணியாற்றி வரும் கே.பி.ராமலிங்கம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பா.ஜ.க மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, உ.பி உள்ளிட்ட ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க வெற்றி குறித்து கரத்து தெரிவித்தபோது,  நாங்கள்  (பாஜக) வெற்றிபெற கூடாது என்று அந்நிய சக்திகள் செய்த சதியை வென்று காட்டி பாஜக  புதிய வரலாறு படைத்துள்ளது என்றும்,  டெல்லியில் நடைப்பெற்ற விவசாயிகள் போராட்டத்தைக் காரணம் காட்டி அனைத்து எதிர்க்கட்சிகளும் சேர்ந்து மக்களிடையே எங்கள்மீது தவறான பிம்பத்தை ஏற்படுத்தின. மத்திய அமைச்சருடைய மகன் பெயரிலேயே கொலை குற்றத்தை சாட்டினார்கள். ஆனால், மக்களுக்கு தெரியும் யார் உண்மையானவர்கள் என்று அதனுடைய எதிரொலியே இந்த வெற்றி என்று கூறியதுடன் மாநில அரசையும் கடுமையாக சாடினார்.

தமிழக அரசு உருவாக்கியுள்ள அயலக செயல்பாட்டு அணி,  இங்கே இருக்கிற கோடி ரூபாய் பணத்தை கொண்டுபோய், துபாயில் பதுக்குவதற்காகவே  உருவாக்கப்பட்டு உள்ளது என்றும்,  சேலத்தில் தி.மு.க எப்படி ஜெயித்தது என்று எங்களுக்கு தெரியாதா, தேர்தல் நேரத்தில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருக்கக் கூடிய கே.என்.நேரு, எந்தெந்த அதிகாரிகள் மூலம் எவ்வளவு பணம் பட்டுவாடா செய்தார் என்கிற பட்டியல் எங்களிடம் இருக்கிறது. அதை எப்போது வேண்டுமானாலும் வெளியிடுவோம்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

கே.பி.ராமலிங்கத்தின் இந்த அதிரடி பேச்சுக்கு மாநில தலைமை பரிசாவ, மாநில துணைத்தலைவர் பதவி வழங்கியுள்ளது. இதுகுறித்து, தமிழக பாஜக  மாநில தலைவர் கே.அண்ணாமலை  வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் , கே.பி.ராமலிங்கம் தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாநில துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.