டெல்லி: கர்நாடக முன்னாள் காங்கிரஸ் முதல்வரும், இந்நாள் பாஜக பிரமுகருமான எஸ்.எம். கிருஷ்ணா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்.
கர்நாடக முன்னாள் முதலமைச்சரும், முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணா காலமானார். அவருக்கு வயது 92. உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த எஸ்.எம்.கிருஷ்ணா பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமுக ஆர்வலர்கள் என பல தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், எஸ்.எம். கிருஷ்ணா மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி, இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எஸ்.எம். கிருஷ்ணா அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க தலைவர். மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அவர் எப்போதும் அயராது உழைத்தார். கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்ததற்காக, குறிப்பாக உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அவர் கவனம் செலுத்தியதற்காக அவர் அன்புடன் நினைவு கூறப்படுகிறார். எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு சிறந்த வாசகர் மற்றும் சிந்தனையாளர்.” “பல ஆண்டுகளாக ஸ்ரீ எஸ்.எம். கிருஷ்ணா ஜியுடன் தொடர்பு கொண்டு உரையாட எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அந்த உரையாடல்களை நான் எப்போதும் போற்றுவேன். அவரது மறைவால் நான் மிகுந்த வருத்தம் அடைகிறேன். அவரது குடும்பத்தினருக்கும் அவரை பின் தொடர்வோருக்கும் எனது அனுதாபங்கள்.
ஓம் சாந்தி,”
இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.