சென்னை:
இந்திரா காந்தியை ஊழல் வழக்கில் கைது செய்த முன்னாள் சிபிஐ அதிகாரி லஷ்மி நாராயணன் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமானார்.
1951-ம் ஆண்டு மதுரையில் உதவி காவல் கண்காணிப்பாளராக பணியில் சேர்ந்த லஷ்மி நாராயணன், மொரார்ஜி தேசாய் பிரதமரானபோது, சிபிஐ அதிகாரியானார்.
அப்போது, ஊழல் வழக்கு தொடர்பாக இந்திரா காந்தியை கைது செய்தார். இந்த கைது நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சிபிஐ-லிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் தமிழக காவல் துறைக்கு மாற்றப்பட்டார். தமிழக காவல் துறையில் பல்வேறு முக்கிய பதவிகளை இவர் வகித்தார்.
1985-ம் ஆண்டு தமிழக காவல் துறை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்றார்.
பெரியார், ராஜாஜி, இந்திரா காந்தி, மொரார்ஜி தேசாய், காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்ஜிஆர் ஆகியோருடன் நட்புடன் இருந்த இவர், முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி கிருஷ்ண ஐயரின் சகோதாரர் ஆவார்.
ஓய்வுக்குப் பிறகு சென்னையில் வசித்து வந்த அவர், உடல் நலக்குறைவு காரணமாக இன்று காலமானதாக அவரது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அவருக்கு வயது 91.