சென்னை: தமிழகத்தில் அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், மேற்பார்வையாளர் நியமனம் செய்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 6 மாதங்களுக்குள் நடத்தப்பட வேண்டிய நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் கவனம் செலுத்தி வருகின்றன. இந்த நிலையில், ஆன்மிக அரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்த ரஜினி, கடந்த 3 ஆண்டுகளாக கட்சியை தொடங்காமல் இழுத்தடித்து வந்தது கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் இன்று திடீரென தனது கட்சி தொடங்கப்படுவது குறித்து டிவிட் பதிவிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதன்படி ஜனவரியில் கட்சி தொடங்குவதாகவும், டிசம்பர் 31ந்தேதி அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்று தெரிவித்தவர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கொடுத்தவாக்கை மாற்ற மாட்டேன், , மக்கள் மத்தியில் எழுச்சி ஏற்படுத்த தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ளதிட்டமிட்டிருந்தாக கூறிய ரஜினி, கொரோனா காரணமாக என்னால் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடியவில்லை என்றும், வெளியே சென்று மக்களை சந்தித்து உயிரே போனாலும் அது தமிழக மக்களுக்காக என்பதில் எனக்கு சந்தோஷம் தான் என கூறினார்.
அதைத்தொடர்ந்து, அர்ஜூன் மூர்த்தியை தன் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமித்து உள்ளதாகவும், தொடங்க உள்ள புதிய கட்சியின் மேற்பார்வையாளராக தமிழருவி மணியன் நியமனம் செய்யப்பட்டு உள்ளதாகவும் அறிவித்தார்.
அர்ஜூன் மூர்த்தியை ஏற்கனவே பாஜகவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்தது குறிப்பிடத்தக்கது.