டில்லி:

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்திய நகரங்களில் நீச்சல் உடை அணிந்து செல்லக் கூடாது என்று மத்திய சுற்றுலா துறை அமைச்சர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஆடை கட்டுப்பாடு விதிமுறைகளை அமைச்சர் அல்போன்ஸ் வெளியிட்டுள்ளார். இது குறித்து என்டிடிவி.க்கு அவர் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், ‘‘ வெளிநாடுகளில் வேண்டுமானால் நீச்சலுடையில் சாலைகளில் நடந்து செல்லலாம். ஆனால், இந்தியாவில் அவர்கள் நகரப் பகுதிகளில் நீச்சலுடையில் உலா வரக் கூடாது. கோவாவில் கடற்கரையில் அவ்வாறு செல்லலாம். சுற்றுலா செல்லும் இடங்களில் அங்குள்ள கலாச்சார சூழ்நிலைக்கு ஏற்ப ஆடைகளை அணியும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

அனைதது சுற்றுலா பயணிகளும் உள்ளூர் கலாச்சாரம், பாரம்பரியத்தை பின்பற்ற வேண்டும். இந்தியா வரும் சுற்றுலா பயணிகள் இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஆடைகளை தான் அணிய வேண்டும். லித்தின் அமெரிக்காவில் உள்ள நகரங்களில் நீச்சலுடையில் நடந்து செல்ல அனுமதிக்கப்படுகிறது. அங்கு அது ஏற்கப்பட்டுள்ளது’’ என்றார்.

‘‘இதில் எவ்வித பிரச்னையும் இல்லை. ஆனால், இந்தியா வந்தால் கலாச்சாரம், பாரம்பரியத்துக்கு ஏற்ப ஆடைகள் அணிய வேண்டும். அதற்காக புடவை அணிய வேண்டும் என்று கூறவில்லை. ஏற்கப்பட்ட ஆடைகளை அணிவது போதுமானது’’ என்றார். இந்த ஆடை கட்டுப்பாடு இந்தியர்களுக்கு மட்டுமல்ல, வெளியில் இருந்து இந்தியா வருபவர்களுக்கும் பொருந்தும்’’ என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு மாட்டு இறைச்சி தொடர்பான விவகாரத்தில் அமைச்சர் அல்போன்ஸ் பேசுகையில்,‘‘ வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மாட்டு இறைச்சியை அவர்களது நாட்டில் சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள உணவு பழக்கத்துக்கு தங்களை தயார் படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறவில்லை. இங்குள்ள உணவை ஏற்றுக் கொள்ளுங்கள்’’ என்று தெரிவித்திருந்தார்.