சிங்கப்பூர் விமான நிலையத்தில் வரி செலுத்தாமல் அதிக பணம் கொண்டு வந்த வெளிநாட்டு பயணிகள் உட்பட 87 பயணிகள் பிடிபட்டுள்ளனர்.

அனுமதிக்கப்பட்ட அளவான 20,000 சிங்கப்பூர் வெள்ளிக்கு அதிகமான தொகை அல்லது சிகரெட், மதுபானம் உள்ளிட்ட பொருட்களுக்கு உரிய வரி செலுத்தாத காரணத்தால் இவர்கள் பிடிபட்டுள்ளனர்.

சிங்கப்பூர் காவல்துறை. குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம், மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு, சிங்கப்பூர் சுங்கத்துறை, தேசிய பூங்காக் கழகம், சுகாதார அறிவியல் ஆணையம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த அதிகாரிகள் இம்மாதம் 17ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடத்திய கூட்டு நடவடிக்கையில் இது நடந்துள்ளது.

சாங்கி விமான நிலையத்தின் நான்கு முனையங்களிலும் 10,000க்கும் அதிகமான பயணிகளிடம் நடத்தப்பட்ட இந்த சோதனையில் 18,000க்கும் மேற்பட்ட பயணப் பெட்டிகளும் கைப்பைகளும் சோதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூன் 20ஆம் தேதிக்கும் 22ஆம் தேதிக்கும் இடையே 8 வெளிநாட்டினர் உட்பட 10 பேர் அதிக தொகையை வைத்திருந்ததாக பிடிபட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் 31 வயது முதல் 71 வயது நிரம்பியவர்கள் என்றும் அதில் ஒருவர் பெண் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களிடம் இருந்து மொத்தம் 1,40,000 சிங்கப்பூர் வெள்ளி மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் கைப்பற்றப்பட்டதாக கூறிய அதிகாரிகள் பிடிபட்ட 6 பேருக்கு 23,000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதாகக் கூறினர்.

அனுமதிக்கப்பட்ட 20,000 வெள்ளிக்கு மேல் வரி செலுத்தாமல் கொண்டு வரும் நபருக்கு 50,000 வெள்ளி அபராதமும் சிறைத் தண்டனையும் விதிக்க அந்நாட்டு சட்டம் உள்ளது குறிப்பிடத்தக்கது.