வாஷிங்டன்
ஆன்லைன் மூலம் கல்வி கற்கும் வெளிநாட்டு மாணவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகில் மிக அளவில் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவில் 30.4 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு சுமார் 1.33 லட்சம் பேர் உயிர் இழந்துள்ளனர். தினசரி சுமார் 45000க்கும் அதிகமானோர் பாதிப்பு அடைகின்றனர். இதற்கு முக்கிய காரணம் இங்குள்ள மக்கள் சமூக இடைவெளி மற்றும் முகக்கவசம் அணிதல் உள்ளிட்டவற்றைப் பின்பற்றாததாகும்.
இதனால் பல கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புக்களை நடத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் ஏற்கனவே ஆன்லைன் வகுப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் சென்ற வருடம் வரை10 லட்சத்துக்கும் அதிகமான வெளிநாட்டு மாணவர்கள் படித்து வருகின்றனர், இவர்கள் அனைவரும் கல்வி விசாவில் வந்துள்ளதால் குடியுரிமை பெறாமல் வசித்து வருகின்றனர்.
அமெரிக்க அரசு இவ்வாறு குடியுரிமை பெறா த மாணவர்களின் கல்வி ஆன்லைனுக்கு மாற்றப்பட்டால் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என அறிவித்துள்ளது. இதனால் வெளிநாட்டு மாணவர்கள் பெரிதும் கலக்கம் அடைந்துள்ளனர். இது குறித்து அமெரிக்கச் சுங்கம் மற்றும் குடியுரிமைத் துறை அதிகாரி ஒருவர் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் ”நேரடியாகக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே அமெரிக்காவில் விசா அளிக்கப்பட வேண்டும் என விதிகள் உள்ளன. ஆகவே ஆன்லைன் மூலம் வகுப்புக்கள் மாற்றப்பட்டுள்ள மாணவர்கள் நேரடி வகுப்புக்கள் நடக்கும் கல்வி முறைக்கு மாற வேண்டும். அப்படி மாறவில்லை எனில் அவர்கள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும்” என எச்சரித்துள்ளார்.