டோக்கியோ: இந்தாண்டு ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் மற்றும் பாராஒலிம்பிக் போட்டிகளில், வெளிநாட்டுப் பார்வையாளர்கள் அனுமதிக்கப்பட வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்தாண்டே நடைபெற்றிருக்க வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள், கொரோனா காரணமாக இந்தாண்டு ஒத்திவைக்கப்பட்டு, ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடத்தப்படுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. பாரா ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5 வரை திட்டமிடப்பட்டுள்ளன.

இதனையடுத்து, வெளிநாட்டுப் பார்வையாளர்கள் ஜப்பானுக்கு வருவதன் மூலம், கொரோனா தொற்று தீவிரமடையும் என்று ஜப்பான் மக்கள் அச்சம் கொள்கின்றனர். மேலும், கொரோனா வைரஸ் ஒவ்வொரு நாட்டிலும் தற்போது உருமாறி, இன்னும் வீரியமாக மாறிவருகிறது.

ஒலிம்பிக் தீப ஓட்டமும், பார்வையாளர்கள் இல்லாமலேயே நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே, ஒலிம்பிக் போட்டிகளும், வெளிநாட்டுப் பார்வையாளர்கள் இல்லாமலேயே நடத்தி முடிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.