புதுடெல்லி: கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் அன்னிய முதலீட்டாளர்கள், இதுவரை இல்லாத வகையில் ரூ.1.1 லட்சம் கோடியை இந்தியச் சந்தைகளிலிருந்து வெளியே எடுத்துள்ளனர்.
கொரோனா வைரஸின் தீவிரப் பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள நம்பிக்கையிழப்பினால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது மிகப்பெரிய தொகையாக கருதப்படுகிறது.
கடந்த மார்ச் மாதத்தில், அன்னிய முதலீட்டாளர்கள், பங்குச் சந்தைகளிலிருந்து ரூ.61 ஆயிரத்து 973 கோடியையும், பத்திரங்கள் சந்தையில் இருந்து ரூ.56 ஆயிரத்து 211 கோடியையும் வெளியே எடுத்துள்ளனர்.
மொத்தத்தில், ரூ.1.18 லட்சம் கோடி அந்நிய முதலீட்டாளர்களால் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. இதுவரை எடுக்கப் பட்டதிலேயே இதுதான் மிக அதிக அளவாகும் என்று கூறப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தில் நடைபெற்ற முதல் இரண்டு வர்த்தக தினங்களில் மட்டும் உள்நாட்டு சந்தையிலிருந்து, ரூ.6,735 கோடியை, அன்னிய முதலீட்டாளர்கள் எடுத்துள்ளனர்.
இதில், ரூ.3,802 கோடிகள் பங்குச் சந்தையிலிருந்தும், ரூ.2,933 கோடிகள் கடன் சந்தையிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளது. பங்குச் சந்தை சரிவால், இந்தியாவின் முதல்நிலை பணக்காரர்கள் தங்களின் செல்வத்தை கணிசமாக இழந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.