அபுதாபி: அமீரக நாட்டில் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் 100% முதலீட்டு உரிமையுடன் தொழில் துவங்குவதற்கான அனுமதியை அந்நாட்டு அரசு வழங்கியுள்ளது.
அமீரக நாட்டுப் பொருளாதாரத்தில் மிக முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது இது. இந்தப் புதிய விதிமுறை, டிசம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை, அந்நாட்டின் ஜனாதிபதி ஷேக் காலிஃபா பின் சையத் அல் நஹ்யான் பிறப்பித்தார்.
அமீரக நாட்டைப் பொறுத்தவரை, இதற்கு முன்னதாக, வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தொழில் தொடங்கும்போது, அமீரக நாட்டின் குடிமக்கள் ஸ்பான்சர்களாக இருந்து 51% பங்குகளைக் கொண்டிருக்க வேண்டும்.
இந்தப் புதிய சட்டத்தின்படி, இனிமேல் அமீரகத்தில், வெளிநாட்டினரால் துவங்கப்படும் பல வணிகங்களுக்கு, அமீரக குடிமக்களை ஸ்பான்சர்களாக கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லை. அந்தத் தேவை இல்லாமலேயே உரிமங்கள் வழங்கப்படும்.
சமீபத்தில், நெடுநாள் எதிரியாக இருந்த யூத நாடான இஸ்ரேலுடன், வெளிப்படையான வணிக ஒப்பந்தத்தை செய்துகொண்டது அமீரகம் என்பது குறிப்பிடத்தக்கது.