மும்பை: நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு, கடந்த 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் சரிவைக் கண்டுள்ளதாக ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து கூறப்படுவதாவது; கடந்த 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், நாட்டின் அன்னிய செலாவணி இருப்பு 47 ஆயிரத்து 466 கோடி டாலராக குறைந்துள்ளது என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இது, இந்திய மதிப்பில் ரூ.36.07 லட்சம் கோடி. கடந்த சில மாதங்களில், அன்னிய செலாவணி இருப்பு தொடர்ந்து புதிய உச்சங்களைத் தொட்டு வந்த நிலையில், தற்போது சரிவைக் கண்டு வருகிறது.
கடந்த 3ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், அன்னிய செலாவணி இருப்பு 90.2 கோடி டாலர் சரிந்து, 47 ஆயிரத்து 466 கோடி டாலராக உள்ளது. இதற்கு முந்தைய வாரத்தில் அன்னிய செலாவணி இருப்பு, 565 கோடி டாலர் அதிகரித்து, 47 ஆயிரத்து 556 கோடி டாலராக உயர்ந்திருந்தது.
மதிப்பீட்டு வாரத்தில் வெளிநாட்டு பணத்தின் மதிப்பு 54.7 கோடி டாலர் குறைந்து, 43 ஆயிரத்து 912 கோடி டாலராக உள்ளது. மேலும், மதிப்பீட்டு வாரத்தில் தங்கத்தின் இருப்பு மதிப்பு, 34 கோடி டாலர் குறைந்து, 3,055 கோடி டாலராக சரிந்துள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.2.32 லட்சம் கோடி என்று கூறப்பட்டுள்ளது.