புதுடெல்லி:
பாபா ராம்தேவிற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் நடத்தத உள்ளதாக மருத்துவ சங்கம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

பதஞ்சலி நிறுவனத்தை நடத்திவரும் பாபா ராம்தேவ், சமீபத்தில் நவீன மருத்துவ முறைகளை (அலோபதி) முட்டாள்தனமான அறிவியல் என்றதோடு, சிகிச்சை, ஆக்சிஜன் உள்ளிட்டவை கிடைக்காமல் இறந்தவர்களைவிட, நவீன மருத்துவ மருந்துகளால்தான் அதிகம் பேர் இறந்தனர் என கூறினார். இது பெரும் சர்ச்சையானது. இந்திய மருத்துவக் கூட்டமைப்பு (indian medical association) ராம்தேவின் கருத்துக்கு கடுமையான கண்டனங்களைத் தெரிவித்தது. மேலும், ராம்தேவின் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது அவர் மீது நடவடிக்கை எடுங்கள் என இந்திய மருத்துவக் கூட்டமைப்பு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தனுக்கு கடிதம் எழுதியது.

மேலும், இந்திய மருத்துவக் கூட்டமைப்பு, நவீன மருத்தவ முறைகளை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என ராம்தேவுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், ராம்தேவிற்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் நவீன மருத்துவ முறைகள் குறித்த உங்கள் கருத்து துரதிருஷ்டவசமானது என்றும் அதனைத் திரும்பப் பெற வேண்டும் எனவும் கூறியிருந்தார்.இதனையடுத்து ராம்தேவ், தனது கருத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாகவும், இந்த சர்ச்சையை நினைத்து வருந்துவதாகவும் தெரிவித்தார்.

அதேநேரத்தில் இந்திய மருத்துவக் கூட்டமைப்பின் உத்தரகாண்ட் பிரிவு, 1000 கோடி நஷ்டஈடு கேட்டு பாபா ராம்தேவுக்க நோட்டீஸ் அனுப்பியது. மேலும் இந்திய மருத்துவ கூட்டமைப்பு, தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களை எடுத்துக் கொண்ட பிறகும் 10,000 மருத்துவர்கள் இறந்துவிட்டார்கள் என ராம்தேவ் பேசும் வீடியோவை சுட்டிக்காட்டி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினர். அதில் தடுப்பூசி குறித்த அச்சமூட்டும் செய்தியை பாபா ராம்தேவ் பரப்புதாகவும், அவர் தங்கள் நிறுவன தயாரிப்புகளின் நலனுக்காக மத்திய அரசின் சிகிச்சை நெறிமுறைகளை எதிர்ப்பதாகவும் எனவே அவர் மீது தேசத்துரோக சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரியிருந்தனர்.

இந்தநிலையில் பெடரேஷன் ஆப் ரெசிடென்ட் டாக்டர் அஸோஸியேஷன் என்ற மருத்துவர்கள் அமைப்பு, கரோனா வீரர்களுக்கும், நவீன மருத்துவத்துக்கும் எதிராக, ராம்தேவ் பேசியவற்றை கண்டிக்கும் விதமாக ஜூன் ஒன்றாம் தேதியை கருப்பு தினமாக அனுசரித்து நாடு முழுவதும் நோயாளிகளுக்கு பாதிப்பு ஏற்படமால் போராட்டம் நடத்தப்போவதாக கூறியுள்ளது. மேலும் ராம்தேவ் நிபந்தனையற்ற பொது மன்னிப்பு கோரவேண்டுமென்றும் இல்லாவிட்டால் அவர் மீது தொற்று நோய் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்த அமைப்பு கோரியுள்ளது.