டில்லி

ராஜஸ்தானைச் சேர்ந்த ஒரு லாரி ஓட்டுநர் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக காவல்துறை ரூ.1.41 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

                                                   மாதிரி புகைப்படம்

இந்த மாதம் ஒன்றாம் தேதியில் இருந்து திருத்தப்பட்ட மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது.  இந்த புதிய சட்டத்தின்படி போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கான அபராதம் சுமார் 10 மடங்கு வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.  இதனால் மக்கள் கடும் துயருற்று வருகின்றனர்.  டில்லியில் இருசக்கர வாகனம் ஓட்டிய  ஒருவர் போக்குவரத்து விதிகளை மீறியதால் ரூ.23000 அபராதம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பிகானேர் மாவட்டத்தைச் சேர்ந்த ஹர்மன் ராம் பம்பு என்பவர் ஒரு லாரி உரிமையாளர் ஆவார்.   இவருக்குச் சொந்தமாக RJ 07 GD 0237 என்னும்  எண்ணுடைய லாரி உள்ளது.  கடந்த 5 ஆம் தேதி அன்று இந்த லாரியில் அவர் டில்லிக்கு சிலிக்கா மணலை அனுப்பி உள்ளார்.  அப்போது இந்த லாரியை போக்குவரத்து காவலர்கள் நிறுத்தி சோதனை இட்டுள்ளனர்.

அந்த சோதனையின் போது அதிக அளவில் லோடு ஏற்றியதற்காக முதல் டன்னுக்கு ரூ.20000  மற்றும் மேற்கொண்டு ஒவ்வொரு டன்னுக்கும் ரூ.2000 என ரூ.48000 அபராதம்  விதிக்கப்பட்டுள்ளது.  அத்துடன் ஆர் சி புக் இல்லாததற்கு ரூ. 10000, அனுமதி இன்றி லோடு ஏற்றியதற்குத் தனி அபராதம் என மொத்தம் ரூ.70,800 ஓட்டுநருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இந்த குற்றங்களுக்குத் துணை போனதற்காக அதே அளவு அபராதமாக  ரூ.70,800 லாரி உரிமையாளரான பம்புவுக்கு விதிக்கப்பட்டுள்ளது.   ஓட்டுநரிடம் பணம் இல்லாத காரணத்தால் அந்த லாரி பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.   உரிமையாளர் பம்பு பணத்தை ஏற்பாடு செய்து நேற்று நீதிமன்றத்தில் மொத்தம் ரூ.1,41,600 செலுத்தி லாரியை மீட்டுள்ளார்.