கொச்சி:
கேரளாவில் முதன்முறையாக பிளாஸ்மா சிகிச்சையால் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த 50 வயது நோயாளி ஒருவர் குணமடைந்துள்ளார்.
மல்லபுரத்தை சேர்ந்தவர் வினிதா ரவி (23), இவர் மஞ்சேரி மருத்துவ கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்த சைனுதீன் (50) என்பவருக்கு பிளாஸ்மா தானம் செய்துள்ளார். இவர் மஸ்கட்டில் இருந்து கேரளா திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த மாதம் சைனுதீன் என்பவர் அதிக காய்ச்சல் மற்றும் சுவாசக் கோளாறால் மஞ்சேரி மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு தகுந்த சிகிச்சை அளித்தும் கூட அந்த சிகிச்சை எதுவும் பலனளிக்கவில்லை.
முதலில் அவருக்கு நிமோனியா இருப்பது கண்டறியப்பட்டது, பின்பு அவர் ஐ சி யூ-வில் அனுமதிக்கப்பட்டிருந்தார், அங்கு அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பின்பு அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்பியபோது, அவருக்குக் கொரோனா இருப்பதும் உறுதியானது. பின் அவருக்கு தகுந்த கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டது, ஆனாலும் அவரது உடல் நிலையில் எந்தவித முன்னேற்றமும் தெரியவில்லை.
இதனால் மருத்துவக் கல்லூரியில் நோடல் அதிகாரியாக இருந்த டாக்டர். ஷைனாஸ் பாபு, கொரோனா சிகிச்சை பெற்று குணம் அடைந்து வீடு திரும்பிய வினிதா ரவி என்பவரை அழைத்து தன்னுடைய பிளாஸ்மாவை தானம் செய்ய முடியுமா என்று கேட்டுள்ளார். அவர் உடனே சரி என்று கூறியதால்….. அனைத்து செயல்முறைகளும் உடனடியாக நடந்தன. இவரிடமிருந்து பிளாஸ்மாவை எடுத்துச் சைனுதீனுக்கு பயன்படுத்திய பின்னர் அவரது உடலில் சிறிது சிறிதாக முன்னேற்றம் தெரிய ஆரம்பித்தது.
இரண்டு வாரங்களுக்குப் பின்னர் அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று உறுதி செய்யப்பட்டது. கொரோனா இல்லை என்று உறுதியான பின் அவர் முழுமையாக குணம் அடைந்து, வினிதா ரவிக்கு நன்றி தெரிவித்து வீடு திரும்பியுள்ளார். இவரே முதன் முறையாக கேரளாவில் பிளாஸ்மா சிகிச்சையால் குணம் அடைந்தவராவார். மேலும் திருச்சூரில் இருவருக்கு பிளாஸ்மா சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது, ஆனால் இன்னும் முடிவு எதுவும் வெளியாகவில்லை.
மேலும் இதைப் பற்றி டாக்டர். ஷைனாஸ் பாபு கூறியதாவது: மாநில மருத்துவ வாரியம் எங்களிடம் பிளாஸ்மா சிகிச்சையை மேற்கொள்ளுமாறு தெரிவித்திருந்தனர். இதனால் நாங்கள் இதனை முயற்சி செய்து பார்த்தோம். பிளாஸ்மா தானம் அளிப்பவர், குறைந்தபட்சம் 14 நாட்களுக்கு முன்னாள் கொரோனாவால் குணமடைந்தவராக இருக்க வேண்டும், அதற்கும் மேலாக இருந்தால் பிளாஸ்மா சிகிச்சை பலனளிக்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வினிதா ரவி இதற்கு பொருத்தமானவராக இருப்பார் என்று கருதப்பட்டது, அவருக்கு சென்னையில் தொற்று ஏற்பட்டுள்ளது சென்னையில் இருந்து கேரளா திரும்பிய அவருக்கு லேசாக காய்ச்சல் இருந்தது, இதனால் வீட்டிற்கு செல்ல பயந்த வினிதா ரவி எங்களிடம் சிகிச்சைக்காக வந்தார்.
வீட்டிற்கு செல்வதற்கு முன்பு இவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். மூன்று நாட்களில் இவருக்கு கொரோனா உறுதியானது அதுவரை தனிமையில் இருந்த வினிதா ரவி பின்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் 13 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
13 நாட்களில் அவருக்கு கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்பு அவர் வீடு திரும்பினார். ஆனாலும் வீட்டில் தன்னை மேலும் ஒருவாரம் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். இவரிடம் இருந்து ப்ளாஸ்மா தானமாக பெறப்பட்டு உடனடியாக சைனுதீனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சைனுதீனின் உடல்நிலை அடுத்தநாளே முன்னேற துவங்கியது. சைனுதீன் முழுமையாக குணமடைந்த பின் வினிதா ரவிக்கு நன்றி தெரிவித்து வீடு திரும்பியுள்ளார்.