ரசிகர்கள் ஆதரவு யாருக்கு: பகுதி 3

மன்றங்கள் வைத்து விசிலடிச்சான் குஞ்சுகளாக இருந்த ரசிகர்களை நற்பணி மன்றங்கள் வைத்து நலத்திட்டங்கள் செய்யச் சொன்னவர் கமல்ஹாசன்தான்.
1980களிலேயே இந்த மாற்றத்தைச் செய்தார் கமல். மேலும், “வருவேன்.. வரமாட்டேன்” என்று ரஜினி போல குழப்பாமல், தனக்கு எந்தவித கட்சி அரசியலும் கிடையாது என்பதை வெளிப்படையாகவே பலமுறை தெரிவித்துவிட்டார்.
ஆகவே அவரது ரசிகர்கள், தனிப்பட்ட விருப்பத்தின் பேரில் வாக்களிப்பார்களே தவிர, மன்றத்தின் பெயரால் அரசியல் செய்வதில்லை.
“ஆனால் இந்தத் தேர்தல் அப்படி அல்ல…” என்று ட்விஸ்ட் வைக்கிறார்கள், ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர்.
அவர்களிடம் பேசியபோது, “வெளிப்படையாக எங்களது அரசியில் நிலைபாட்டைச் சொன்னால் தலைவர் (கமல்) கோபமடைவார். ஆகவேதான் எங்கள் பெயரைச் சொல்லவில்லை” என்றவர்கள் விரிவாகவே பேசினார்கள்:
“எங்கள் தலைவர், எல்லா அரசியல் தலைவர்களுடனும் இணக்கமாக பழகுபவர். அதே போலத்தான் கடந்த பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக ப.சிதம்பரம் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் “வேட்டி கட்டிய தமிழன் பிரதமராக வேண்டும்” என்று பேசினார். அவர் பொதுவாகத்தான் பேசினார் என்றாலும் திமுக தலைவர் கருணாநிதி அதை வினையாக்கிவிட்டார். அதாவது “சேலை கட்டிய தமிழச்சி என்று கமல் சொல்லவில்லை.. வேட்டி கட்டிய தமிழன் என்றுதான் சொன்னார்” என்று திரியைக் கொளுத்துவிட்டார்.
இது முதல்வர் ஜெயலலிதாவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. அந்த சமயத்தில், கமலின் விஸ்வரூபம் படத்தை வெளியிடக்கூடாது என இஸ்லாமிய அமைப்புகள் சில பிரச்சினை செய்ய.. படத்துக்கு பாதுகாப்பு தர முடியாது என முதல்வர் ஜெயலலிதாவின் தமிழக அரசு சொன்னது. அதாவது கமலை பழிவாங்கினார் ஜெயலலிதா.
மனம் உடைந்த கமல், இந்தியாவைவிட்டே போகிறேன் என்று குமுறும் அளவுக்கு விசயம் சீரியசானது. பிறகு படம் வெளியானாலும், ஜெயலலிதாவால் எங்கள் தலைவர் (கமல்) மனம் புண்பட்டதை நாங்கள் மறக்கவில்லை. அதே நேரம் இந்த விவகாரத்தை ஆரம்பத்தில் தூண்டிவிட்ட கருணாநிதியையும் ஆதரிக்க முடியாது” என்றனர்.
“சரி, வேறு யாரைத்தான் ஆதரிப்பீர்கள்.. “ என்று கேட்டதற்கு, “ இன்னும் நான்கு நாட்கள் இருக்கின்ற. மன்ற நிர்வாகிகளுக்குள் முழுமையான தகவல் தொடர்பு இருக்கிறது பேசி முடிவெடுப்போம்” என்றார்கள்.
“ஜி.கே. வாசனைவிட ஸ்லோவா இருக்காங்களே.. “ என்று நினைத்தபடி விஜய் ரசிகர்கள் தரப்பை அணுகினோம்.
அவர்கள், “கோவை மற்றும் தஞ்சையில் விஜய் மன்ற நிர்வாகிகள் திமுக முக்கிய பிரமுகர்களை சந்தித்த விசயம் கசிந்தபோது, அக் கட்சிக்குத்தான் விஜய் மன்றங்கள் ஆதரவு அளிக்கப்போகின்றன என்பது போல ஒரு கருத்து நிலவியது. ஆனால் இப்போதுதான் விஜய், யாருக்கும் ஆதரவில்லை என்று அறிவித்துவிட்டாரே… ரசிகர்கள் தனிப்பட்ட முறையில் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டுப்போடலாம்…” என்றார்கள்.
அடுத்து அஜீத்…
கடந்த 2011வது வருடமே தனது ரசிகர்கள் மன்றங்களை கலைத்துவிட்டார் அஜித். ஆனாலும் விடாமல் ரசிகர் மன்றங்களை நடத்தி(!) வருகிறார்கள் ரசிகர்கள்.
அதிமுக தலைமைக்கு ஆதரவானவர், அவரது படங்களுக்கு அதிமுக பிரமுகர்கள் சிலர் பைனான்ஸ் செய்கிறார்கள் என்று பேசப்படுவது உண்டு.
முதல்வர் ஜெயலிலதாவை சந்தித்து ஜென்டிலாக கைகுலுக்கி பேசியதும், கடந்த திமுக ஆட்சியில் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் முன்னிலையிலேயே “உங்க நிகழ்ச்சிக்கு வரணும்னு நிர்ப்பந்தபடுத்துறாங்க சிலர்” என வெளிப்படையாக அஜீத் சொன்னதும்… அவரை அதிமுக ஆதரவாளராக காட்டியிருக்கிறது.
ஆனால் அஜீத்துக்கு நெருங்கி வட்டாரத்தில் விசாரித்தால், “மன்றங்களே இல்லை என்கிற போது, அவர்களை இன்னாருக்கு ஓட்டுப்போடுங்கள் என்று அஜீத் சொல்வாரா..” என்று சிரிக்கிறார்கள்.
(நிறைவு)
Patrikai.com official YouTube Channel