டில்லி

ரசியல் பதிவு ஒன்றை \முகநூலில் பதிந்த இந்திய பயளியின் அடையாளங்களை அந்நிறுவனம் தனது ஊழியர் மூலம்  சோதித்துள்ளது.

முகநூல் என்னும் சமூக வலைத்தளம் தற்போது மிகவும் பிரபலமாக உள்ளது. பலரும் தங்கள் அரசியல் கருத்துக்கள் உள்ளிட்ட அனைத்தையும் சுதந்திரமாக பகிர்ந்து வருகின்றனர். அந்த பதிவுகளை ஆதரிப்போரும் எதிர்ப்போரும் பதிவுகளில் பின்னூட்டம் இட்டு தங்கள் கருத்துக்களை தெரிவிக்கின்றனர். பல்வேறு கட்சியினரும் முகநூலை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆனால் தற்போது முகநூல் குறித்து பல புகார்கள் எழுந்துள்ளன. கடந்த அமெரிக்க அதிபர் தேர்தல் நேர்த்தில் பல அமெரிக்கர்களின் விவரங்கள் திருடப்பட்டுள்ளன. இந்தியாவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தலை ஒட்டி காங்கிரஸ் தொடர்புள்ள நூற்றுக் கணக்கான இந்தியக் கணக்குகளும் பக்கங்களும் முடக்கப்பட்டுள்ளன. இதை ஒட்டி முகநூல் காங்கிரஸுக்கு எதிராக நடப்பதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்தியாவின் நகரத்தில் உள்ள ஒரு முகநூல் பயனாளி அரசியல் பதிவு ஒன்றை பதிந்துள்ளார். அதிர்ச்சி ஊட்டும் விதமாக அவருடைய வீட்டுக்கு முகநூல் ஊழியர் ஒருவர் வந்து அந்த பதிவை பதிந்தது குறிப்பிட்ட பயனாளியா என விசாரித்துள்ளார். அத்துடன் அவருடைய அடையாளங்களை ஆதார் எண் மூலம் சோதித்துள்ளார். இந்த விவகாரம் கடும் அதிர்ச்சியை உண்டாக்கி இருக்கிறது.

அந்த பதிவை பதிந்த நபர், “பாஸ்போர்ட் விசாரணைக்கு காவல்துறையினர் வருவதைப் போல் இது அமைந்துள்ளது. மூகநூல் ஊழியர் என்னிடம் எனது அடையாளத்தை நிரூபிக்க ஆதார் அட்டை உள்ளிட்ட பல ஆவண்ங்களை பரிசோதித்தார். இதனால் எனக்கு மிகவும் மன வருத்தம் ஏற்பட்டுள்ளது. ஒரு சமூக வலை தளம் எவ்வாறு இப்படி நடந்துக் கொண்டு எனது சொந்த விவரங்களில் நுழையலாம்? இதுவும் ஒருவகையில் அரசுக்கு மறைமுக ஆதரவு தானே? ” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரபல சைபர் கிரைம் வழக்கறிஞர் பவன் துக்கல், “இந்த நடவடிக்கை ஒரு தனிப்பட்ட நபரின் அந்தரங்கத்தில் தலையிடுவதாகும். ஒரு வலை தள பயனாளியின் வசிப்பிடத்துக்கு சென்று ஒரு ஊழியர் பயனாளியின் சொந்த விவரங்களை கேட்பது தவறானதாகும். அரசு மட்டுமே இவ்வாறு விசாரணை மேற்கொள்ள முடியும். இந்த சூழ்நிலையில் பயனாளி முகநூல் மீது வழக்கு தொடர முடியும். அத்துடன் அரசையும் இவ்வாறு நடவடிக்கை எடுக்க உரிமை அளித்ததற்காக குற்றம் சாட்டலாம்.” என தெரிவித்துள்ளார்.