சென்னை
அடுத்த 5 நாட்களுக்குத் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் எங்கும் தற்போது கோடை அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. பல இடங்களில் மக்களை வெயில் வாட்டி வருகிறது. சென்னைக்குக் குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான வீராணம் ஏரியில் நீர் மட்டம் குறைந்துள்ளதால் இன்னும் 10 நாட்களுக்கு மட்டுமே வீராணத்தில் இருந்து சென்னைக்கு நீர் வழங்க முடியும் என அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.. அதில் ”கேரளா மற்றும் அதனை ஒட்டிய மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் ஒரு கிலோ மீட்டர் உயரம் வரை காற்றின் சுழற்சி உள்ளது. இதனால் வரும் 27 ஆம் தேதி வரை கன்யாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி போன்ற தென் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தலைநகர் சென்னையில் அடுத்த இரு நாட்களுக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரில் குறைந்த பட்ச வெப்பம் 75.2 டிகிரி ஃபாரான்ஹீட் மற்றும் அதிக பட்ச வெப்ப நிலை 93.2 டிகிரி ஃபாரன்ஹீட் ஆக இருக்கக் கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.