லைச்சேரி

பொன்னியம் மார்க்சிஸ்ட் கட்சி தொண்டர் பவித்ரன் என்பவரை கொலை செய்த 7 பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் தொண்டர்களுக்கு  தலைச்சேரி நீதிமன்றம் ஆயுள் தண்டனை அளித்துள்ளது.

 

கொலை செய்யப்பட்ட பவித்ரன்

கேரள மாநிலம் தலைச்சேரி அருகில் உள்ள பொன்னியம் என்னும் ஊர் உள்ளது.   இங்கு வசித்து வரும் பவித்ரன் என்பவர் மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்தவர் ஆவார்.    இவருக்கும் அதே ஊரில் உள்ள பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் இயக்க தொண்டர்களிடையே தகராறு நிலவி வந்ததாக கூறப்படுகிறது.

கடந்த 2007 ஆம் வருடம் நவம்பர் மாதம் ஆறாம் தேதி காலை சுமார் 5.45 மணிக்கு பவித்ரன் பால் வாங்க வந்துள்ளார்.   அப்போது அவரை பாஜக மற்றும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தை சேர்ந்த 8 பேர் கூடி தாக்கி உள்ளனர்.  அந்த ஊரில் உள்ள குழந்தைகள் மையம் அருகே இந்த தாக்குதல் நடந்துள்ளது.    பவித்ரன் அங்கிருந்து தப்பி ஒரு வீட்டுக்குள் சென்று ஒளிந்துக் கொண்டுள்ளார்.

அவரை விடாமல் துரத்திய 8 பேரும் அவரை கத்தியால் தாக்கியதில் அவருக்கு தலை, கழுத்து மற்றும் உடலெங்கும் காயம் ஏற்பட்டுள்ளது.   அவர் கோழிக்கோடு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.  சிகிச்சை பலனின்றி பவித்ரன்  நவம்பர் 10 ஆம் தேதி மரணம் அடைந்தார்.

                                 தண்டனை அளிக்கபட்ட 7 பேர்

காவல்துறையினர் வழக்கு பதிந்து பிரசாந்த், லைஜேஷ், வினீஷ்,பிரசாந்த் என்னும் முத்து, அனில் குமார், விஜிலேஷ், மகேஷ் மற்றும் ஜோதிஷ் ஆகியோரை கைது செய்தனர்.   இந்த வழக்கை தலைச்சேரி நீதிமன்றம் விசாரித்து வந்தது.    வழக்கு நடைபெறும் போது ஜோதிஷ் இறந்து விட்டார்.

மீதமுள்ள 7 பேர் மீதான குற்றத்தை  உறுதி செய்த தலைச்சேரி நீதிமன்ற நீதிபதி வினோத் இந்த 7 பேருக்கும் கொலை, சட்ட விரோதமாக கூடியது, தாக்குதல்,  ஆயுத தாக்குதல் உள்ளிட்ட பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தார்.   அத்துடன் இவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.