ஹூப்ளி: மாநிலத்தின் நிலைமை இப்போதும் இருக்கும் நிலையில் தேர்தல் நல்லதல்ல என்று கர்நாடக முன்னாள் முதலமைச்சர் ஹெச்.டி.குமாரசாமி கூறியிருக்கிறார்.
ஹூப்ளியில் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்த போது இவ்வாறு கூறினார். செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்து இருப்பதாவது: இப்போதைய நிலையில் பாஜகவை எக்காரணம் கொண்டும் ஆதரிக்க மாட்டோம்.
மாநிலத்தில் வெள்ளத்தினாலும், போதிய நிவாரணமும் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். அவர்களின் வாழ்க்கை இன்னமும் மேம்படவில்லை. இத்தகைய தருணத்தில் தேர்தல் தேவையில்லை. நாட்டு மக்களுக்கு யார் நல்லது செய்கிறார்களோ அவர்களை ஆதரிப்போம்.
அது மாநிலம் தற்போது உள்ள நிலையில் கூடுதல் சுமை. அதனால் தான் நான் சொல்கிறேன் தேர்தல் இப்போதைக்கு அவசியம் இல்லை என்றார். ஒருவேளை இடைத்தேர்தலில் பாஜக அரசு பெரும்பான்மை இழந்துவிட்டால் என்ன செய்வீர்கள் என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அது குறித்து பேசிய குமாரசாமி, யூகங்களுக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது என்றார். தொலைபேசி ஒட்டுகேட்பு, ஊழல் விவகாரங்களில் இருந்து விடுபடவே தான் பாஜகவை ஆதரிக்க இருப்பதாக ஊடகங்கள் கூறுவது முற்றிலும் தவறானது. நான் விரும்புவது எல்லாம், வெள்ளத்தால் பாதிக்கப்பட் மக்களுக்கு வேண்டிய நிவாரண உதவிகள் சென்று சேர வேண்டும் என்பது தான் என்றார்.