டெல்லி: இடஒதுக்கீடு தொடர்பான தீர்ப்பு வழங்கப்பட்டு 70ஆண்டுகள் கடந்துவிட்டன;  இன்னும் எத்தனை தலைமுறைக்கு கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீடுகள் தொடரும்? என உச்சநீதிமனறம் கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழகத்தில் 69 சதவிகிதம் இடஒதுக்கீடுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. அதுபோல,  மகாராஷ்டிரத்தில் மராத்தா சமூகத்தினருக்கு கல்வியிலும், வேலைவாய்ப்புகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிரான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு, நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான அமா்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கின் விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. அப்போது, மகாராஷ்டிர அரசு சாா்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், முகுல் ரோத்தஹி , கடந்த 1992-ஆம் ஆண்டு இந்திரா சாவ்னி வழக்கில் வழங்கப்பட்ட தீா்ப்பின்படி (மண்டல் தீா்ப்பு) இடஒதுக்கீடு என்பது 50%-க்கு மிகாமல் இருக்க வேண்டும். விதிவிலக்கான, அசாதாரண சூழல்களில் மட்டும் இந்த உச்சவரம்பை கடந்து இடஒதுக்கீடு வழங்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,  இந்தத் தீா்ப்பு 1931-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு வழங்கப்பட்டது. நாட்டின் தற்போதைய மக்கள்தொகை பன்மடங்கு அதிகரித்து 135 கோடியை எட்டியுள்ளது. இதற்கிடை யில்,  பொருளாதாரரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு அறிமுகப்படுத்தப்பட்டதன் மூலம், இடஒதுக்கீட்டு வரம்பை மத்திய அரசும் கடந்துள்ளது.

இதனால், தற்போதைய சூழல்,  மக்கள்தொகை அதிகரிப்பு ஆகியவற்றைக் கருத்தில்கொண்டு மாநிலங்களே இடஒதுக்கீட்டு உச்சவரம்பை நிா்ணயித்துக்கொள்ள அனுமதிக்க வேண்டும்  என்றார்.

இதைத்தொடர்ந்து கருத்து தெரிவித்த நீதிபதிகள்,  இடஒதுக்கீடுக்கு உச்சவரம்பு இல்லையெனில் சமத்துவம் என்பது என்னவாகும்?  என்று கேள்வி எழுப்பியதுடன், இதை நாம் கவனத்தில் கொள்ளாவிட்டால், அதன் விளைவுகள் விபரீதமாக இருக்கும்?  அதுபற்றி உங்கள் கருத்து என்ன? என்று அச்சம் தெரிவித்ததுடன், இன்னும்  எத்தனை தலைமுறைகளுக்கு இடஒதுக்கீடுகள் தொடரும்,  நாடு சுதந்திரமடைந்து 70 ஆண்டுகளைக் கடந்துவிட்டது. மாநில அரசுகள் வளா்ச்சித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றன. அவ்வாறு இருக்கும்போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் முன்னேறவில்லை; வளா்ச்சி என்பதே ஏற்படவில்லை என ஏற்றுக்கொள்ள முடியுமா என்று கேள்வி எழுப்பினா்.

இதற்கு பதில் தெரிவித்து பேசிய வழக்கறிஞர்,  முகுல் ரோத்தஹி, நாம் முன்னேற்றம் அடைந்துள்ளோம். அதற்காக பிற்படுத்தப்பட்ட வகுப்பினா் 50%ல் இருந்து 20%ஆக குறைந்துவிட்டனா் என்று அா்த்தமாகாது. நாட்டில் இன்றும் பட்டினிச் சாவுகள் நோ்கின்றன. இந்திரா சாவ்னி வழக்கில் வழங்கப்பட்ட தீா்ப்பு தவறு என்று நான் கூறவில்லை. ஆனால், அந்தத் தீா்ப்பு வழங்கப்பட்டு 30 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டது. சட்டம் மாறியுள்ளது, மக்கள்தொகை அதிகரித்துள்ளது, பிற்படுத்தப்பட்டவா்களும் அதிகரித்திருக்கலாம் என்றவர்.

50% இடஒதுக்கீடு உச்சவரம்பை கடப்பது தெரிந்தும், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்க நாடாளுமன்றமே ஒப்புதல் வழங்கியுள்ள நிலையில், 50%-க்கு மேல் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என நீதிமன்றத்தின் எந்த உத்தரவும் தெரிவிக்கக் கூடாது என்று வாதாடினார்.

இதைத்தொடர்ந்து வழக்கு 22ந்தேதி மீண்டும் விசாரிக்கப்படும் என ஒத்திவைக்கப்பட்டது.