காந்திநகர்
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு தொழிலதிபரை மிரட்டி ரூ. 5 கோடி பறித்த சிபிஐ அதிகாரியை சிபிஐ கைது செய்துள்ளது.
குஜராத் தலைநகரான காந்தி நகரில் சிபிஐ ஆய்வாளராக சுனில் நாயர் என்பவர் பணி புரிந்து வருகிறார். அதே நகரில் உள்ள தொழிலதிபரான சைலேஷ் பட் என்னும் தொழிலதிபரைச் சென்ற வருடம் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி தனது இல்லத்துக்கு வர உத்தரவிட்டுள்ளார். பயந்து போன பட் உடனடியாக அவர் இல்லத்துக்குச் சென்றுள்ளார். அப்போது சுனில் நாயர் மற்றும் கிரிட் மதுபாய் அலாடியா ஆகிய இருவரும் அவரை மிரட்டி உள்ளனர்.
பிட் காயின் மூலம் சைலேஷ் பட் ஏராளமான கருப்புப் பணம் ஈட்டி உள்ளதாகவும் அதனால் வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துரை நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து நடவடிக்கைகளை எடுக்க விடாமல் செய்ய தனக்கு ரூ.10 கோடி அளிக்க வேண்டும் எனப் பேரம் பேசி உள்ளார்.
கடைசியில் பேரம் ரூ.5 கோடிக்குப் படிந்துள்ளது. அந்த பணத்தைக் கேட்டு அவர் சிபிஐ அலுவலக தொலைப்பேசி மூலம் கேட்டுள்ளார். அதன் பிறகு இரு தவணையாக சைலேஷ் பட் ரூ.4 கோடியே 60 லட்சம் வரை அளித்துள்ளார். தாம் பிட் காயினில் கருப்புப் பணம் ஈட்டவில்லை என ப்ட் புகார் அளித்துள்ளார். இது குறித்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி சுனில் நாயரைக் கைது செய்து வழக்குப் பதிந்துள்ளனர்.