ஹராரே: கொரோனா பரவல் காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், ஆப்ரிக்காவின் பல நாடுகளில் உணவு பொருட்களுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஆப்ரிக்காவில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், அந்த கண்டத்தில் உள்ள மொத்தம் 54 நாடுகளில், பாதிக்கும் மேலாக, அதாவது 33 நாடுகளில், விவசாயிகளிடம் இருந்து உணவு பொருட்கள் சந்தைகளுக்கு செல்வது தடைபட்டுள்ளது.
இதனால், கிராமப்புற மக்களுக்கு உணவு பொருட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உணவுப் பொருட்களுக்கான கடைகள் லட்சக்கணக்கில் அடைக்கப்பட்டுள்ளன.
கொரோனா அச்சுறுத்தலுக்கு முன்னரே, 25 கோடி மக்களுக்கு, அதாவது 5ல் ஒருவருக்கு போதிய உணவு கிடைப்பது இல்லை என்பது உணவு மற்றும் விவசாய அமைப்பின் கண்காணிப்பில் தெரியவந்தது. அதுவே, கொரோனா பரவலுக்கு பின் இரு மடங்காகியுள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, ஊரடங்கு மற்றும் எல்லைகள் மூடல் காரணமாக, உணவுப் பொருட்கள் கிடைப்பதற்கு மக்களுக்கு பெரும் சிக்கல் ஏற்படுகிறது. இதனால் ஏற்படும் பாதிப்பை, இதற்கு முன்னர் ஆப்ரிக்கா சந்தித்திருக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கின்றனர் ஆய்வாளர்கள்.
முறையான விதிமுறைகள் இல்லாமல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதானது, ஏழைகளை மோசமாக பாதித்துள்ளதாக ஐ.நா. சபை கவலை தெரிவித்துள்ளது. இதனால், உணவு கிடைக்கும் இடங்களில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.