சென்னை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உள்ள கேன்டீனில் எலி புகுந்து உணவு பொருட்களை தின்றது தொடர்பான வீடியோ வைரலான நிலையில், அரசு மருத்துவமனை கேண்டின்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளது.
கடந்த இரு நாட்களுக்கு முன்பு வடசென்னையில் அமைந்துள்ள பிரபலமான அரசு மருத்துவமனையான ஸ்டான்லி மருத்துவமனையில் செயல் பட்டு வரும் உணவு கேட்டீனின் கண்ணாடி ரேக்குகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த தின்பண்டங்கள் மீது எலி ஒன்று ஓடியதோடு வடை, பஜ்ஜி போன்றவற்றை சாப்பிடவதும் விளையாடுவதுமாக இருந்தது. இதை அந்த கேன்டீனில் சாப்பிட்டுக்கொண்டிருந்தவர்கள், பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கேன்டீன் ஊழியரிடம் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட, அவர் உடனடியாக கம்பை கொண்டு இரண்டு எலிகளை விரட்டினார். காட்சி தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.
இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் பாலாஜி குறிப்பிட்ட கேண்டினை இழுத்து மூடுமாறு உத்தரவிட்டார். இதனை அடுத்து அந்த கேண்டீனுக்கு சீல் வைக்கப்பட்ட நிலையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மருத்துவமனை முதல்வர் பாலாஜிக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கேட்டுள்ளனர்.
இந்த நிலையில் அரசு மருத்துவமனை கேண்டீன்களுக்கு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது உணவு பாதுகாப்பு துறை வெளியிட்டு உள்ளது. அதன்படி,
கேண்டின்கள் தொடர்ந்து முறையாக சுத்தம் செய்ய வேண்டும், கிருமி நாசினி தெளிக்க வேண்டும், உணவுகளுக்கு அருகே உள்ள துளைகள், சாக்கடை, கால்வாய்கள் போன்றவற்றை முழுமையாக மூட வேண்டும். பறவைகள், செல்ல பிராணிகள் உணவு நிலையங்கள் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்க கூடாது. அடைக்கப்பட்ட உணவு பொருட்கள் காலாவதி காலத்திற்குள் இருந்தால் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் உள்ளிட்ட புதிய வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது