புதுடெல்லி: மொத்த விற்பனை விலை குறியீடு அடிப்படையிலான பணவீக்கம், மார்ச் மாதம் 1% என்ற அளவிற்கு குறைந்துள்ளதாக மத்திய வர்த்தக அமைச்சக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தப் பணவீக்கம் பிப்ரவரி மாதம் 2.26% என்ற அளவில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வர்த்தக அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்கள் அடிப்படையில் கூறப்படுவதாவது; பிப்ரவரி மாதத்தில் 7.79% என்பதாக இருந்த உணவு பணவீக்கம், மார்ச் மாதம் 4.91% என்பதாகக் குறைந்துள்ளது. அதேபோல், காய்கறிகள் பணவீக்கம் பிப்ரவரியில் 29.97% என்ற உச்ச நிலையில் இருந்து, மார்ச் மாதம் 11.90% என்ற அளவிற்கு சரிந்துள்ளது.

ஆனாலும், வெங்காயத்தை மட்டும் விலை குறைவு பாதிக்கவில்லை. வெங்காயத்தின் பணவீக்கம் 112.31% என்ற உச்ச நிலையில் மார்ச் மாதம் தொடர்கிறது. எரிபொருள் மற்றும் மின் துறையில் 1.76% பணவாட்டம் நிலவுகிறது. உற்பத்தி பொருட்களின் பணவீக்கம் 0.34% என்பதாக உள்ளது.

மார்ச் 25ம் தேதி முதற்கொண்டு தொடரும் தேசிய அளவிலான ஊரடங்கால், தகவல்களைப் பெறுவதில் பாதிப்பு ஏற்பட்டதாகவும், மாத இறுதி வெளியீட்டின்போது புள்ளிவிவரங்கள் குறிப்பிடத்தக்க வகையில் திருத்தப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.