வாக்கி-டாக்கி குண்டுத் தாக்குதலைத் தொடர்ந்து லெபனான் மீது முழு அளவிலான தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருவதாகத் தெரிகிறது.
காசா மீதான தாக்குதலை 11 மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேல் தொடர்ந்து வரும் நிலையில் ஹமாஸ் படையினருக்கு உதவியாக லெபனானின் ஹெஸ்பொல்லா அமைப்பினர் செயல்பட்டு வந்தனர்.
ஹெஸ்பொல்லா அமைப்பினர் பயன்படுத்தி வந்த 3000க்கும் அதிகமான பேஜர்களை ஒரே நேரத்தில் நேற்று முன்தினம் செவ்வாயன்று வெடிக்கச் செய்த இஸ்ரேல் இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்ற 24 மணி நேரத்தில் புதன்கிழமை பிற்பகல் நூற்றுக்கணக்கான வாக்கி-டாக்கி, ரேடியோக்கள், ஐ-போன்கள் மற்றும் பிற மின்னணு சாதனங்களை வெடிக்கச் செய்துள்ளனர்.
இஸ்ரேலின் இந்த எலக்ட்ரானிக் யுத்தம் உலகின் எந்த மூலையில் இருந்தும் மற்றொரு மூலையில் இருக்கும் யார் மீதும் தாக்குதலை நடத்தக் கூடிய வல்லமை படைத்த நாடாக இஸ்ரேல் தன்னை முன்னிலை படுத்தி இருப்பதன் மூலம் உலகையே கதி கலங்க வைத்துள்ளனர்.
இந்த நிலையில், வாக்கி – டாக்கி குண்டு வெடிப்பு சம்பவத்தைத் தொடர்ந்து லெபனான் எல்லையை நோக்கி தனது ராணுவத்தின் கவனத்தை திரும்பியுள்ள இஸ்ரேல் அடுத்த கட்ட போருக்கு தயாராகி வருவதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேலின் பாதுகாப்பு மந்திரி யோவ் கேலண்ட்-டின் இந்த அறிவிப்பால் லெபனானில் உள்ள ஹெஸ்பொல்லா மீது இஸ்ரேல் முழு அளவிலான தாக்குதலை மேற்கொள்ளும் என்ற அச்சம் எழுந்துள்ளது.
இருந்தபோதும் இஸ்ரேலின் இதுபோன்ற ஒரு நடவடிக்கையை அமெரிக்கா வழக்கம் போல் எதிர்க்கும் என்றும் கூறப்படுகிறது.
லெபனானில் நேற்று நடைபெற்ற வெடி குண்டு தாக்குதலில் வாக்கி – டாக்கி, ரேடியோக்கள், ஐ-போன்கள், பாதுகாப்பு கதவுகள், வீட்டு சூரிய சக்தி அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு மின்னணு சாதனங்கள் வெடித்துச் சிதறின.
கார்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், கடைகளுக்குள் இருந்த மின்னணு சாதனங்கள் தவிர செவ்வாயன்று நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தவரை அடக்கம் செய்ய சென்ற ஊர்வலத்தில் இருந்த ஒருவரின் வாக்கி-டாக்கி என நாடு முழுவதும் பல இடங்களில் வெடிகுண்டுகள் ரிமோட் கண்ட்ரோல் மூலம் வெடிக்கச் செய்ததால் மக்கள் பீதியில் உள்ளனர்.
இந்த நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா இன்று வியாழக்கிழமை தொலைக்காட்சியில் உரை நிகழ்த்துவார் என்று கூறப்படுகிறது. அப்போது அவர் இஸ்ரேலின் இந்த தாக்குதல்களுக்கு பதிலடி கொடுப்பது குறித்து உரையாற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.