கோவில்களின் பராமரிப்பை இந்து சமுதாயத்திடம் ஒப்படைக்கும் பிரச்சாரத்தை விஎச்பி தீவிரப்படுத்த உள்ளதாவதும் அதற்காக மாநில முதல்வர்கள் மற்றும் ஆளுநரிடம் இந்த கோரிக்கையை வைக்கவும் திட்டமிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதி தேவஸ்தான லட்டு பிரசாதத்தில் கலப்படம் தொடர்பான முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் பேச்சு நாடு முழுவதும் சர்ச்சையானதை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த விஸ்வ ஹிந்து பரிஷத் (விஎச்பி) தலைவர் டாக்டர் சுரேந்திர ஜெயின் இவ்வாறு கூறினார்.

கோவில் நிர்வாகத்தை நடத்துவது அரசின் வேலை இல்லை என்று கூறிய அவர் இந்துக் கோயில்களின் முழுக் கட்டுப்பாட்டையும் இந்து சமூகத்திடம் ஒப்படைக்கும் வகையில் ‘இந்துக்களுக்காக இந்து சமாஜ் கா தன்’ என்ற நாடு தழுவிய பிரச்சாரத்தை VHP மேற்கொள்ளும் என்று தெரிவித்தார்.

இந்த பிரச்சாரத்தின் கீழ், அனைத்து மாநிலங்களிலும் VHP விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தும். முதல்வர் மற்றும் கவர்னர்களை சந்தித்து, கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க கோரிக்கை மனுவை அளிக்க உள்ளனர்.

மேலும், கோவில்களை அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்க போராட்டங்கள் மற்றும் சமூக விழிப்புணர்வு நடத்தப்படும் என விஎச்பி தெரிவித்துள்ளது.

ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து இந்த பிரச்சாரத்தை VHP முன்னெடுக்க உள்ளதை அடுத்து அயோத்தி ராமர் கோயில் நிர்வாகம் போன்று தென் மாநிலத்திலும் ஏற்படும் என்பதால் திருப்பதி தேவஸ்தானத்தின் கட்டுப்பாடு யாரிடம் செல்ல உள்ளது என்ற கேள்வி அம்மாநில மக்களிடையே எழுந்துள்ளது.

தவிர, லட்டு விவகாரத்தில் திருப்பதி தேவஸ்தானத்தின் இந்நாள் மற்றும் முன்னாள் அறங்காவலர்கள் இடையே பிரச்சனை முற்றியுள்ள நிலையில் கோயில் நிர்வாகம் எந்த தரப்பு இந்துக்களிடம் ஒப்படைக்கப்படும் என்ற எதிர்பாப்பும் அதிகரித்துள்ளது.