ராஞ்சி: மாட்டு தீவனம் ஊழல் வழக்கில் ஏற்கனவே 4 வழக்குகளில் பீகார் முன்னாள் முதல்வர் லாலுபிரசாத் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் நிலையில்,  5வது வழக்கிலும் லாலு பிரசாத் யாதவ் குற்றவாளி என ராஞ்சி சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 1996-ஆம் ஆண்டு பீகார் மாநில முதல்வராக இருந்த போது கால்நடைகளுக்கான தீவனம் கொள்முதல் செய்ததில் லாலு பிரசாத் உள்ளிட்டோர் கையாடல் செய்ததாக 5 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இவற்றில் 4 வழக்குகளில் லாலுபிரசாத் யாதவ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, தண்டனை காலமும் அறிவிக்கப் பட்டது. அதன்படி, 4 வழக்குகளில் 20.5 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது, லாலு உடல்நிலையை காரணம் காட்டி ஜாமினில் இருந்து வருகிறார்.

இந்த நிலையில் 5வது வழக்கிலும் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. டொராண்டா கருவூலத்தில் இருந்து பண  மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கிலும், அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். லாலு பிரசாத் யாதவ் உள்பட  75 பேர் குற்றவாளிகள் என ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.