புதுச்சேரி: காங்கிரஸ் ஆட்சி செய்யும் புதுச்சேரி மாநிலத்தில், முதல்வர் நாராயணசாமிக்கு எதிராக ஆளுங்கட்சி எம்எல்ஏக்களே ராஜினாமா செய்துள்ள நிலையில், அங்கு இன்று பெரும்பான்மை நிரூபிக்க துணைநிலை பொறுப்பு ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று அங்கு சட்டபேரவை சிறப்புக்கூட்டம் நடைபெறுகிறது. இன்றைய பேரவை கூட்டத்தில் காங்கிரஸ் அரசு தப்புமா என்பது கேள்விகுறியாகி உள்ளது.
கடந்த 2016 தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சிக்க 15 எம்.எல்.ஏக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். மாநிலத்தில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீப காலமாக, அங்கு கட்சிக்குள் ஏற்பட்ட மோதல் காரணமாக, 5 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மற்றும் திமுக எம்எல்ஏ ஒருவரும், தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளானர். ஒரு எம்எல்ஏ பதவி கட்சித் தாவல் சட்டத்தின் கீழ் பறிக்கப்பட்டுள்ளது. திமுகவுக்கு 2 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர்.
தற்போதைய நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு சட்டப்பேரவையில் 9 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. இதனால் நாராயணசாமி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அதே வேளையில் எதிர்க்கட்சியாக ரங்கசாமி தலைமையிலான என்ஆர் காங்கிரசுக்கு 7 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதன் கூட்டணி கட்சியான அதிமுகவுக்கு 4 எம்எல்ஏக்கள் உள்ளனர். அத்துடன் மாகே தொகுதி சுயேச்சை வேட்பாளர் ஆதரவும் உள்ளது. இதுமட்டுமின்றி, பாஜகவைச் சேர்ந்த நியமன எம்எல்ஏக்கள் 3 பேர் ஆதரவும் ரங்கசாமிக்கு கிடைத்துள்ளது. இதனால், எதிர்க்கட்சி பெரும்பான்மை பெறும் நிலை உருவாகி உள்ளது.
இந்த இக்கட்டான சூழலில்தான் இன்று மாலைக்குள் சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் தமிழிசை உத்தரவிட்டுள்ளனார். இதனால் முதல்வர் நாராயணசாமி அரசு கவிழும் சூழல் நிலவி வருகிறது.