திருவள்ளூர்
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் குசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் பல இடங்களில் சில நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. அதில் சித்தூர் மாவட்டத்தில் பெய்த கன மழையால் லவா குசா ஆகிய இரு ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனால் சித்தூர் மாவட்டம் அம்மாபள்ளி அணையில் இருந்து நீர் திறக்கப்பட்டுள்ளது. அந்த நீர் குசஸ்தலை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடி வருகிறது.
நேற்று நள்ளிரவு முதல் அணையில் திறக்கப்படும் நீர் 200 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் திருவள்ளூர் மாவட்டம் குசஸ்தலை கரையோர கிராமங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. திருத்தணி கோட்டாட்சியர் விடுத்துள்ள அறிக்கையில் “திருவள்ளூர் மாவட்டம் பள்ளிக்கோடு அருகில் உள்ள கரையோர கிராமங்களுக்கு வெள்ள அபாயம் உள்ளது. நீர் வரத்து அதிகரித்துக் கொண்டு வருவதால் யாரும் ஆற்றில் குளிக்க வேண்டாம். ஆற்றை கவனமாக கடந்து செல்ல வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
இந்த குசஸ்தலை ஆற்றின் நீர் பூண்டி அணைக்கு செல்கிறது. பூண்டி அணை சென்னைக்கு குடிநீர் ஆதாரம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த வெள்ளத்தினால் பூண்டியில் நீர் மட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டுக்குப் பின் மீண்டும் குசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.