சென்னை: முதலமைச்ச்ர மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு செயலாற்றியதால், தொடர் மழை காரணமாக தமிழகத்தில் வெள்ள பாதிப்பு தவிர்க்கப் பட்டுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பாராட்டு தெரிவித்துள்ளதுடன், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்கிற பணியில் காங்கிரஸ் கட்சியினர் உடனடியாக ஈடுபட வேண்டுமென கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர் நோக்கி தமிழக அரசு திட்டமிட்டு செயலாற்றியதால் வெள்ள நிவாரணப் பணிகள் முடுக்கி விடப்பட்டு, பாதிப்புகள் அதிகளவில் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெள்ள பகுதிகளுக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உரிய ஆணைகளை பிறப்பித்து, நிவாரணப்பணிகளை முடுக்கி விட்டதற்காக அவரை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன். இதன்மூலம் அரசு எந்திரம் வேகமாக செயல்பட்டு வருகிறது.
செம்பரம்பாக்கம், புழல், பூண்டி போன்ற நீர்த்தேக்கங்களில் இருந்து உரிய நீர் மேலாண்மை திட்டத்தின் அடிப்படையில் தண்ணீர் படிப்படியாக திறந்து விடப்பட்டதால் பெரிய அளவில் பாதிப்புகள் ஏற்படாமல் மக்கள் பாதுகாக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த நடவடிக்கை சென்னை மாநகர மக்களை வெள்ள பாதிப்பில் இருந்து முற்றிலுமாக பாதுகாத்து இருக்கிறது.
தமிழகத்தில் ஒரே நாளில் 23 செ.மீ. மழை பெய்ததால் பல பகுதிகளில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. வடகிழக்கு பருவமழையின் காரணமாக அக்டோபர் 1 முதல் 7-ந் தேதி வரை இயல்பு நிலையை விட 43 சதவிகிதம் கூடுதல் மழை பெய்திருக்கிறது. 36 மாவட்டங்களில் அதிக மழை பெய்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
சென்னை வானிலை ஆய்வாளர் கூற்றின்படி நவம்பர், டிசம்பர் மாதங்களில் 25 நாட்கள் கன, மிக கனமழை இருக்கும் என்று அந்த அறிவிப்பு கூறுகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி அல்லது வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடும் மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தமிழக அரசின் பேரிடர் மேலாண்மைக்குரிய செயல் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் உருவாக்குகிற பணியில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடுபட்டிருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது.
தமிழகத்தில் பல மாவட்டங்களில் கடும் மழையின் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகளை செய்கிற பணியில் காங்கிரஸ் கட்சியினர் உடனடியாக ஈடுபட வேண்டுமென கேட் டுக் கொள்கிறேன்.
பாதிக்கப்பட்ட வெள்ளப் பகுதிகளுக்கு சென்று அரசு அதிகாரிகளோடு இணைந்து, நிவாரண உதவிகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முறையாக போய்ச் சேருவதை உறுதி செய்கிற வகையில் காங்கிரஸ் கட்சியினர் துணைபுரிகிற வகையில் செயல்பட வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.