ஜெர்மன் நாட்டின் போக்குவரத்து தொழில்நுட்ப நிறுவனமான ப்ளிக்ஸ்-பஸ் டெல்லி உள்ளிட்ட வட இந்திய நகரங்களில் செயல்பட்டு வருகிறது.

செப்டம்பர் 10 முதல் தென்னிந்தியாவிலும் இதன் சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளனர்.

விபத்தில்லா பாதுக்காப்பான பயணத்தை இலக்காகக் கொண்டு பேருந்துகளில் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களை பொறுத்தி வரும் இந்நிறுவனம் தென்னிந்தியாவில் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட உள்ளது.

பெங்களூரில் இருந்து சென்னை, மதுரை, கோவை, ஹைதராாத், விஜயவாடா, பெலகாவி உள்ளிட்ட நகரங்களுக்கு பேருந்துகளை இயக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

அதற்காக யூனிவரசல் பஸ் சர்வீசஸ், ஜெகன் டிராவல்ஸ், அண்ணா டிராவல்ஸ், ஜெய் ஸ்ரீ டிராவல்ஸ், சமன்வி டிராவல்ஸ் மற்றும் வருண் டிராவல்ஸ் உள்ளிட்ட ஆறு உள்ளூர் பேருந்து ஆப்பரேட்டர்களுடன் கைகோர்த்துள்ள ப்ளிக்ஸ்-பஸ் நிறுவனம் தனது புதிய பேருந்துகளை அசோக் லேலண்ட் மற்றும் பிரகாஷ் கோச் பில்டர்ஸ் தொழிற்சாலைகளில் வடிவமைத்துள்ளது.

ஏசி ஸ்லீப்பர் பேருந்துகளான இவற்றில் வேக கண்காணிப்பு, வேக கட்டுப்பாடு மற்றும் எச்சரிக்கை தவிர வலைவுகள் மற்றும் பள்ளம் மேடுகளில் செல்லும்போது பயணிகளுக்கு அசௌகரியம் இல்லாத நவீன தொழில்நுட்பங்களை கொண்டு வடிவமைத்துள்ளது.

ஏபிஎஸ், இசிஎஸ் மற்றும் அனைத்து சீட்களிலும் சீட் பெல்ட் உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ள இந்த பேருந்துகளை கர்நாடக தொழில்துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் பெங்களூரில் நேற்று கொடியசைத்து துவக்கி வைத்தார்.

செப்டம்பர் 10 முதல் பெங்களூரில் இருந்து மற்ற நகரங்களுக்கு 12 சேவைகளை இயக்கவுள்ள ப்ளிக்ஸ்-பஸ் ஆரம்பகால சலுகையாக அக்டோபர் 6 வரை ரூ 99 கட்டணத்தில் இந்நகரங்களுக்கு பேருந்துகளை இயக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

இதற்கான முன்பதிவு துவங்கியுள்ளதாகவும் ப்ளிக்ஸ்-பஸ் இணையதளம் அல்லது செயலி மூலம் முனாபதிவு செய்துகொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 101 நகரங்களை இணைக்கும் வகையில் 215 நிறுத்தங்களில் நின்று செல்லும் ப்ளிக்ஸ்-பஸ் விரைவில் ஸ்லீப்பர் தவிர இருக்கைகளுடன் கூடிய பேருந்துகளையும் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.