டெல்லி:
வால்மார்ட் நிறுவனத்தின் இந்திய உரிமையை முழுவதுமாக ஃபிளிப் கார்ட் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. வால்மார்ட் இந்தியா நிறுவனத்தின் 100 சதவீத பங்குகளையும் வாங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் புகழ் பெற்ற வால்மார்ட் நிறுவனம் சில்லறை வர்த்தக துறையில் புகழ்பெற்ற நிறுவனம் ஆகும். உலகம் முழுவதும் பல டிபார்ட்மெண்டல் ஸ்டார் உட்பட வணிக தளங்களை இயக்கி வருகிறது. அதே போல ஆசிய நாடுகளில் தனது நிறுவனத்தை பிரபலப்படுத்தி வருகிறது. அதன் ஒருபகுதியா இந்தியாவிலும் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு கால் பதித்தது.
ஏற்கனவே இந்தியாவில், அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் ஆகிய இணைய தளங்கள் உள்ள நிலையில், வால்மார்ட்டின் வரவு பரபரப்பை ஏற்படுத்தின. இந்திய நிறுவனங்களின் வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும் என குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.
ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் 40%க்கும் அதிகமான பங்குகளை வாங்க வால்மார்ட் நிறுவனம், பேச்சு வார்த்தை நடத்துவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கிடையில், ஆர்எஸ்எஸ் அமைப்பு வால்மார்ட் நிறுவனத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. ஆர்எஸ்எஸ்-சின் சுதேசி ஜாக்ரன் மன்ச் அமைப்பு பிரதமர் மோடிக்கு பகிரங்கமாக கடிதம் எழுதியது. அதில், “வால்மார்ட் நிறுவனம் இந்திய சட்டங்களை மீறி பின்பக்க வழியாக இந்தியாவுக்குள் நுழைந்து விட்டது. இதனால் இந்தியாவில் உள்ள சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகள், சிறு கடைகள் போன்றவை பெருமளவில் பாதிக்கப்படும் என்று எச்சரித்தது.
இருந்தாலும், ஃபிளிக் கார்டை வாங்குவதால், இந்தியாவில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என வால்மார்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி விளக்கம் அளித்து வந்தார்.
இந்த நிலையில், உள்நாட்டு சில்லறை வர்த்தகரகளுக்கு ஆதரவாக மத்திய அரசு நேரடி முதலீட்டுக் கொள்கையில் சில திருத்தங்களை அறிவித்தது. அதன் வாயிலாக அன்னிய முதலீட்டு ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் தாங்கள் முதலீடு செய்த வர்த்தக நிறுவனப் பொருட்களை விற்க முடியாத நிலை ஏற்பட்டது.
இவ்வாறாக சர்ச்சைகள் தொடர்ந்து வந்த நிலையில், வால்மார்ட்டால் இந்தியாவில் நினைத்தபடி கால் ஊற்ற முடியாத நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில், தற்போது வார்மார்ட் இந்தியா நிறுவனத்தின் 100 சதவிகித பங்குகளை ஃபிளிப் கார்ட் நிறுவனம் கையகப்படுத்தி உள்ளதாக அறிவித்துஉள்ளது.
மேலும், புதிதாக டிஜிட்டல் விற்பனையகம் தொடங்கி, சிறு குறு தொழில்களை ஊக்குவிக்கப் போவதாகவும் தெரிவித்து உள்ளது. இதற்கான பணிகள் வரும் ஆகஸ்டு மாதம் முதல் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
முதல்கட்டமாக, மளிகை பொருட்கள், அழகு சாதன பொருட்கள் விற்பனை செய்யப்படும் என்றும், இதற்கு ஃபிளிப்கார்ட் நிறுவன மூத்த துணைத்தலைவர் ஆதார்ஷ் மேனன் பொறுப்பேற்க உள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும், வால்மார்ட் இந்தியா தலைமை செயல் அதிகாரி சமீர் அகர்வால் தொடர்ந்து ஃபிளிப் கார்டுடன் இணைந்து நிறுவனத்தில் பணியாற்றுவார் என்றும், வால்மார்ட் இந்தியா நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஊழியர்கள் ப்பிளிப்கார்டு குழுமத்திற்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.