கொல்கத்தா: கொரோனா பரவல் அதிகம் உள்ள 6 நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த சில கட்டுப்பாடுகளை மேற்கு வங்க அரசு தளர்த்தி உள்ளது.
கொரோனா பாதிப்பை தொடர்ந்து மார்ச் 25ம் தேதி முதல் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவை நிறுத்தப்பட்டது. பின்னர் கட்டுப்பாடுகளுடன் மே 25 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டது.
ஆனால், கொரோனா பாதிப்புகள் அதிகம் காணப்படும் நாட்டின் முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, சென்னை, புனே, நாக்பூர் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் இருந்து கொல்கத்தாவுக்கு விமானங்களை இயக்க வேண்டாம் என மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி மத்திய அரசிடம் வலியுறுத்தினார்.
அவர் சில கட்டுப்பாடுகளையும் விதித்து இருந்தார். ஆகையால் சென்னை, டெல்லி, மும்பை, அகமதாபாத், நாக்பூர், புனே உள்ளிட்ட 6 நகரங்களில் இருந்து, கொல்கத்தாவுக்கு விமானங்கள் இயக்க அம்மாநில அரசு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
இந் நிலையில், கொரோனா பரவல் அதிகம் உள்ள 6 நகரங்களில் இருந்து கொல்கத்தா வரும் விமான சேவைகளில் சில கட்டுப்பாடுகளை மேற்கு வங்க அரசு தளர்த்தி உள்ளது.
அதாவது டெல்லி, மும்பை, சென்னை, புனே, நாக்பூர் மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் செப்டம்பர் 1 முதல் வாரத்திற்கு 3 முறை கொல்கத்தாவில் விமானங்கள் தரையிறங்கலாம் என்று அனுமதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, கொல்கத்தாவுக்கு இந்த 6 நகரங்களில் இருந்து விமான சேவை தொடங்குகிறது.