சென்னை
நேற்று சென்னையில் பெய்த கனமழையால் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
நேற்று சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென இடி மின்னல் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் அப்போது சென்னை விமான நிலையத்திற்கு தரையிறங்க வந்த விமானங்கள் தரை இறங்க முடியாமல், வானில் வட்டமடித்து பறந்து தத்தளித்துக்கொண்டு இருந்தன.
புனேயில் இருந்து 140 பயணிகளுடன் இறங்க வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் மற்றும் பிராங்பர்ட்டில் இருந்து சென்னை வந்த லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானம், சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் என 7 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாமல், நீண்ட நேரம் வானில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்தன.
எனவே துபாயில் இருந்து வந்த எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம், பெங்களூருவுக்கு அனுப்பப்பட்டது. மீதமுள்ள விமானங்கள் நீண்ட நேரம் வானத்தில் வட்டமடித்து பறந்து கொண்டு இருந்த நிலையில், சுமார் 1 மணி நேரத்தில் மழை ஓய்ந்ததும், விமானங்கள் ஒன்றன்பின் ஒன்றாக, சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கின.
இதைப் போல் சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய சிங்கப்பூர், பிராங்பர்ட், அபுதாபி, சார்ஜா, தோகா, துபாய், டெல்லி, ஆமதாபாத் ஆகிய 8 விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன. நேற்று மட்டும் சென்னை விமான நிலையத்தில் 15 விமான சேவைகள் பாதிக்கப்பட்டு பயணிகள் அவதிக்குள்ளானார்கள்.