போர்ட்பிளேர்: கொரோனா வைரசானது, அந்தமான் தீவுகளில் அழிவின் விளிம்பில் இருக்கும் பழங்குடியின மக்களில் 5 பேரை தாக்கியுள்ளது.
அந்தமான் தீவுகளில் அரிதான பழங்குடியின மக்கள் இன்னமும் வாழ்ந்து வருகின்றனர். சோம்பியன், ஜாரவா, சென்டினன்ஸ், ஓங்கே, மற்றும் கிரேட் அந்தமான் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் குறைந்த அளவில் வாழ்ந்து வரும், கிரேட் அந்தமான் பழங்குடியினத்தவர்கள் 56 பேரில் 5 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
போர்ட் பிளேர் அருகிலுள்ள ஸ்ட்ரெய்ட் தீவில் வசிக்கும் கிரேட் அந்தமான் பழங்குடியினத்தை சேர்ந்தவர்களுக்கு கடந்த வாரம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவர்களில் சிலருக்கு கோவிட் 19 இருப்பது உறுதி செய்யப்பட்டதாக மூத்த சுகாதார அதிகாரியான மருத்துவர் அவிஜித் ராய் கூறி உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: பழங்குடி இனத்தினர் போர்ட் பிளேயருக்கும், அவர்களின் தீவுக்கும் இடையில் அவ்வப்போது பயணம் செய்யும்போது அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.
அவர்களில் சிலர் பல ஆண்டுகளாக நகர்ப்புற பகுதிகளில் தங்கி சிறுசிறு வேலைகளை செய்துவருகின்றனர். தீவுக்கூட்டத்தின் பிற பழங்குடியினர் இடையே நோய்த்தொற்று பரவாமல் பார்த்து கொள்வதே முக்கியமான சவால்.
நாங்கள் அவர்களின் நடமாட்டத்தை கவனித்து வருவதோடு, தேவையான பழங்குடியினரை சோதனைக்கு உட்படுத்துகிறோம் என்று கூறினார். அந்தமான், நிக்கோபார் தீவு வெளியிட்டுள்ள சுகாதார அறிக்கையின் படி, ஆகஸ்ட் 25ம் தேதி நிலவரப்படி தீவுகளில் தொற்றுநோய்களின் மொத்த எண்ணிக்கை 2,945 ஆகவும், இறப்புகளின் எண்ணிக்கை 37 ஆகவும் இருந்தது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.