சென்னை:  தமிழக மீனவர்கள்  இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது தொடர்ந்து வரும் நிலையில், அதை தடுக்க வலியுறுத்தி, பாஜக தலைவர்  அண்ணாமலை தலைமையில் தமிழக மீனவர் குழு மத்திய அமைச்சரை சந்தித்து பேசினர்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதும், தாக்கப்படுவதும், தமிழக மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதையும் தடுக்க வலியுறுத்தி, மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தலைமையில்,  தமிழக மீனவர் குழு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை  டெல்லியில், சந்தித்து தங்களது பிரச்சினை களுக்கு தீர்வுகாண வலியுறுத்தினர்.

அண்மைக்காலமாக இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது, படகுகள் பறிமுதல் செய்யப்படுவது அதிகரித்துள்ளதுடன், மீனவர்களுக்கு சிறை தண்டனை மற்றும் அதிக அபராதம் விதிக்கப்படுகிறது. இது தமிழக மீனவர்களிடையே அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் 19 படகுகள் இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டு, 145 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் மீனவர்கள், மத்திய மாநில அரசை கண்டித்து போராட்டம் நடத்தினர். பின்னர் அதிகாரிகள் பேசியதால், அவர்களின் போராட்டம் கைவிடப்படடது.

இந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில், ராமநாதபுரம், தஞ்சாவூர், நாகை, காரைக்கால் மாவட்ட மீனவப் பிரதிநிதிகள் டெல்லி சென்றனர். மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை, மீனவர்கள் சங்கப் பிரதிநிதிகள் சேசுராஜா, எமிரிட், அன்பழகன், சின்னதம்பி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்டோர்  சந்தித்துப் பேசினர்.

இந்த சந்திப்பின்போது, தமிழக மீனவர்கள் குழு,  இலங்கை கடற்படையால் மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து விவரித்ததுடன், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வரும் பிரச்சினைகளுக்கு மத்திய அரசு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளையும், கைது செய்யப்பட்ட மீனவர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். படகுகளை இழந்த மீனவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இரு நாட்டு மீனவப் பிரதிநிதிகள் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்து, பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வுகாண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி அளித்தார்.

பிரதமர் மோடி வரும் ஏப்ரல் மாதம்  இலங்கை செல்ல உள்ள நிலையில், மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக மீனவப் பிரதிநிதிகள், வெளியுறவுத் துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள வெளியுறவுத்துறை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், மார்ச் 13 மாலை டெல்லியில், அண்ணாமலை  தலைமையிலான தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் குழுவைச் சந்தித்தேன். நிலையான தீர்வை ஆராயும் நோக்கில் அவர்களின் கவலைகள் குறித்து விவாதித்தோம். அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் அரசாங்கத்தின் அணுகுமுறையை வழிநடத்தும். தூதரக வழக்குகளில்  மத்தியஅரசு, தமிழக மீனவர்களுக்கு தொடர்ந்து முழு ஆதரவை வழங்கும் என பதிவிட்டுள்ளார்.