கன்னியாகுமரி : தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரி அருகே மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தூத்துக்குடி மக்கள் நடத்திய  போராட்டத்தில் காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் பத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து ஏராளமான அரசியல் கட்சி, அமைப்புகள், இயக்கங்கள், சங்கங்கள் சார்பாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்  கன்னியாகுமரி மீனவர்களும் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குரும்பனை பகுதியில் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வரும் அவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும், துப்பாக்கிச்சூடு நடத்திய காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிடுகின்றனர்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் இன்னாசி தேவாலயப் பகுதியில் இருந்து ஊர்வலமாக வந்து, கருப்புக் கொடிகளுடன் கடலில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.