சென்னை: தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு முடிவடைந்த நிலையில்,   அண்ணா பல்கலையில் முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆகஸ்டு 11ந்தேதி தொடங்கும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்து உள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் ஆக. 18 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும்.

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கை பொது கலந்தாய்வு மூலம் நடைபெற்று, இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரிகளில் பி.இ, பி.டெக் படிப்பில் அரசு ஒதுக்கீட்டுக்கு ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் உள்ளன. இந்த இடங்களுக்கு 2.39 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்தனர்.

இவர்களுக்கு முதல் சுற்று கவுன்சலிங் முடிவடைந்து, சுமார் 30000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து இரண்டாம் சுற்று கலந்தாய்வு தொடங்கியது. 143 முதல் 178.9 கட் ஆஃப் வரை உள்ள சுமார் 98000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இரண்டாம் சுற்று கலந்தாய்வில் கலந்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. இதில் 80,363 பொதுப் பிரிவு மாணவர்களும், 14,828 அரசுப் பள்ளிப் பிரிவு மாணவர்களும் என 95191 மாணவர்கள் சாய்ஸ் ஃபில்லிங் செய்தனர்.இந்த நிலையில், இரண்டாம் சுற்று கலந்தாய்வில் 43,156 மாணவர்களுக்கு சீட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொதுப் பிரிவில் 36,921 மாணவர்களுக்கும், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீடு பிரிவில் 6,235 மாணவர்களுக்கும் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது தவிர, 15,461 பொதுப் பிரிவு மாணவர்களுக்கும், 2,748 அரசுப் பள்ளிப் பிரிவு மாணவர்களுக்கும் தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செய்திக் குறிப்பு தெரிவித்திருந்தது.

சீட் ஒதுக்கீடு பெற்றவர்கள் ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் அந்தந்த கல்லூரிகளுக்குச் சென்று சேர்க்கை செயல்முறையை முடிக்க வேண்டும். அதேபோல், தற்காலிக ஒதுக்கீடு வழங்கப்பட்டவர்கள் ஆகஸ்ட் 4 ஆம் தேதி அல்லது அதற்கு முன் TNEA வசதி மையத்திற்குச் சென்று, அவர்களின் அசல் சான்றிதழ்களை வழங்கி, அவர்களின் ஒதுக்கீட்டு உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். தற்போது ஒதுக்கப்பட்ட இடத்தை உறுதிப்படுத்துவதை உறுதி செய்வதற்கும், மேல்நோக்கிச் செல்வதற்கும் விரும்புபவர்கள் இந்த நடவடிக்கையை செய்ய வேண்டும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

மாணவர்கள் ஒதுக்கப்பட்ட இடத்தில் சேரத் தவறினால் அல்லது காலக்கெடுவிற்குள் தங்கள் தற்காலிக ஒதுக்கீட்டை உறுதிப்படுத்தத் தவறினால், அந்த இடங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு, அதே சுற்றின் போது மேல்நோக்கிய நகர்வுக்காகக் காத்திருக்கும் மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என்று  அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இநத் நிலையில்,  அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் வளாக பொறியியல் கல்லூரிகளில், முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் ஆக. 11 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்புபில்,  அண்ணா பல்கலைக்கழகத்தில் இயங்கும் வளாக பொறியியல் கல்லூரிகளில், பி.இ., பி.டெக். உள்ளிட்ட படிப்புகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் ஆக. 11 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும். முன்னதாக ஆக. 5 முதல் ஆக. 9 வரை அறிமுக வகுப்புகள் நடைபெறும்.

அதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வரும் ஆக. 18 ஆம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும்.

முதல் செமஸ்டர் தேர்வுகள் வரும் டிசம்பர் 16 ஆம் தேதி தொடங்கும். தேர்வுகள் நிறைவடைந்த பிறகு, அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் ஜன. 5 ஆம் தேதி தொடங்கப்படும் என்று குறிப்பிடப்ப்பட்டுள்ளது.

3 கட்டங்களாக நடைபெறும் பொறியியல் கலந்தாய்வு ஆகஸ்ட் 23ஆம் தேதியுடன் நிறைவு பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.