பாட்னா: பீகார் மாநிலத்தில் முதல் மகளிர் மட்டும் தபால் நிலையத்தை துவக்கி வைத்தார் மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்.
இதுதொடர்பாக கூறப்படுவதாவது; பீகார் தலைநகர் பாட்னாவிலுள்ள மாநில அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலக வளாகத்தில் இதனை துவக்கி வைத்தார் அமைச்சர்.
“இப்போது துவங்கப்பட்டுள்ள இந்த மகளிர் மட்டும் தபால் அலுவலகத்தில், தலைமை அதிகாரி முதல் தபால் விநியோகம் செய்பவர் வரை அனைத்தும் மகளிரே. மாநில அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு இந்த மகளிர் மட்டும் தபால் அலுவலகம் சிறந்த முறையில் துணைபுரியும்” என்றார் அமைச்சர்.
அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், பீகார் மாநிலத்தின் முதல் ஆதார் கேந்திர மையத்தையும் துவக்கி வைத்தார். இது நாட்டின் பத்தாவது ஆதார் கேந்திர மையம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அளவில், முதல் மகளிர் மட்டும் தபால் நிலையம், கடந்த 2013ம் ஆண்டு மார்ச் மாதத்தில் டெல்லியில் துவக்கி வைக்கப்பட்டது என்பது நினைவில் கொள்ளத்தக்கது.