ஷாங்காய்: பாகிஸ்தானுக்காக, சீனா தயாரித்துவரும் 4 அதிநவீன போர்க்கப்பல்களில், தற்போதைய நிலையில் முதல் கப்பலுக்கான வேலைமுடிந்து, அந்தக் கப்பல் முற்றிலும் தயாராகிவிட்டதாக செய்திகள் கூறப்படுகின்றன.
இதுகுறித்து கூறப்படுவதாவது; சீனாவின் அதிநவீன, ‘டைப் – 054 பிரிகேட்ஸ்’ ரக போர் கப்பல்களை வாங்க, அந்நாட்டின் கப்பல் கட்டுமான வர்த்தக நிறுவனத்துடன், கடந்த 2017ம் ஆண்டு, பாகிஸ்தான் சார்பில் ஒப்பந்தம் போடப்பட்டது.
இந்நிலையில், சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யி மற்றும் பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி ஆகியோர், கடந்த 21ம் தேதி சீனாவில் சந்தித்து, இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து, சீனா தயார்செய்து வரும் 4 போர்க்கப்பல்களில், முதலாவது கப்பல் தயார் நிலையில் இருப்பதாக சீனா அறிவித்துள்ளது. இந்தப் போர்க்கப்பலின் அதிகாரப்பூர்வ துவக்க விழா, சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள ஹூடாங் ஸோன்குவா கப்பல் தளத்தில் சமீபத்தில் நடைபெற்றது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.