மும்பை:
இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக, அரசியல் கட்சிகளிடையே நோட்டாவும் போட்டிபோட்டு 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளது. விரைவில் நோட்டா முதலிடத்துக்கு வரும் என்று அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நாடு முழுவதும் தமிழகம் உள்பட 18 மாநிலங்களில் உள்ள 51 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 2 மக்களவைத் தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் மற்றும் மகாராஷ்டிரா, அரியானா மாநில சட்டமன்ற தேர்தலும் கடந்த 21ந்தேதி நடைபெற்றது. நேற்று (24)ந்தேதி வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்றது.
இதில் மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கூட்டணி பெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தின் ரூரல் தொகுதியான லத்தூர் தொகுதியில், காங்கிரஸ், பாஜக கூட்டணியான சிவசேனா கட்சிகள் இடையே நேரடி மோதல் நிலவியது.
இங்கு காங்கிரஸ் சார்பாக முன்னாள் முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் இளைய மகனான தீரஜ் தேஷ்முக் போட்டியிட்டார். அவரை எதிர்த்து சிவசேனாவின் ரவி ராம்ராஜே தேஷ்முக் போட்டியிட்டார்.
நேற்று நடைபெற்ற வாக்கு எண்ணிக்கை முடிவுகளல், காங்கிரஸ் வேட்பாளர் தீரஜ் 1 லட்சத்து 34 ஆயிரத்து 615 வாக்குகள் பெற்று முதலிடம் பிடித்தார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட சிவசேனா வேட்பாளர் ரவி ராம்ராஜே 13 ஆயிரத்து 459 வாக்குகளை பெற்றார். ஆனால் அவருக்கும் அதிகமாக நோட்டா அதிகமான வாக்கு பெற்றிருந்தது.
லத்தூர் தொகுதியில் ‘நோட்டா’ (யாருக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை) வுக்கு 27,449 பேர் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதன்மூலம் காங்கிரஸ் வேட்பாளர், தீரஜ், நோட்டாவை 1,04,422 வாக்குகள் வித்தியாத்தில் வென்றுள்ளார்.
இதன்மூலம் இந்தியத் தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக அரசியல் கட்சியை பின்னுக்கு தள்ளி நோட்டா’ 2வது இடத்தை பிடித்துள்ள வியப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் உஷாராக இருப்பதை இந்த நோட்டா வாக்கு விகிதம் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.