டில்லி
கடந்த ஆகஸ்ட் மாதம் வாகன விற்பனையில் இதுவரை வரலாறு காணாத அளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
வாகன விற்பனையில் கடந்த 10 மாதங்களாகத் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது. இதனால் பல வாகன உற்பத்தி தொழிற்சாலைகள் தங்கள் உற்பத்தியை நிறுத்தும் நிலை உண்டாகி உள்ளது. இதையொட்டி கடந்த மாதம் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசுத் துறைகளுக்கு புதிய வாகனங்கள் வாங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கி உள்ளார். அத்துடன் 2010 ஆம் வருடம் ஆகஸ்ட் 10க்கு பிறகு வாங்கப்பட்ட வாகனங்களுக்கு 15% தேய்மானம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் நிதி அமைச்சர் வரும் 2020 ஆம் வருடம் வரை வாங்கப்படும் பிஎஸ் 4 எஞ்சின்கள் பொருத்தப்பட்ட வாகனங்கள் உரிமம் முடியும் வரை இயங்க அனுமதி அளித்தார். அமைச்சரின் இந்த சலுகை அறிவிப்பால் வாகன விற்பனை சரிவில் இருந்து மீளும் என பலரும் எதிர்பார்த்தனர். தற்போது விழாக்காலம் வருவதால் சென்ற மாதத்தில் இருந்து விற்பனை அதிகரிக்கும் என உற்பத்தி தொழிலதிபர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
ஆனால் இதற்கு நேர்மாறாக சென்ற மாதம் பயணிகள் வாகன விற்பனை 31.57% குறைந்துள்ளது. அதாவது முந்தைய வருடத்தை விட 1,96,254 வாகனங்கள் குறைவாக விற்பனை ஆகி உள்ளன. இது வரலாறு காணாத விற்பனைச் சரிவு ஆகும். பேருந்து மற்றும் லாரிகள் விற்பனையில் 39% சரிவும் இரு சக்கர வாகனங்களின் விற்பனையில் 22% சரிந்துள்ளன. கடந்த 1997-98 ஆம் வருடம் ஏற்பட்ட மிகப் பெரிய வாகன விற்பனைச் சரிவை விட இது அதிகமாகும்.
இந்தியாவில் அதிக அளவில் வாகன உற்பத்தி செய்யும் மாருதி சுசுகி நிறுவனம் வாரம் இரு தினங்கள் தனது உற்பத்தியை முழுவதுமாக நிறுத்தி உள்ளது. இதே நிலையில் பல வாகன உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. சென்னையில் பிரபல நிறுவனங்களான டிவிஎஸ் மற்றும் அசோக் லேலண்ட் ஆகிய நிறுவனங்களும் தங்கள் உற்பத்தியை நிறுத்தி உள்ளன.