டில்லி

ந்தியாவில் பெட்ரோல், டீசல் மற்றும் விமான எரிபொருள் விற்பனை கடும் சரிவைச் சந்தித்துள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த நாடெங்கும் கடந்த மார்ச் 24 முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  இதனால் அனைத்து போக்குவரத்துக்களும் நிறுத்தப்பட்டுள்ளன.  சாலை போக்குவரத்து மட்டுமின்றி விமானப் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால் வர்த்தகம், தொழில் உற்பத்தி ஆகியவை அடியோடு நின்றுள்ளது.   இந்த ஊரடங்கால் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை தொடர்ந்து குறைந்து வருகிறது.  இந்த சரிவு விமான எரிபொருள் விற்பனையில் கடுமையாக உள்ளது.   எல் பி ஜி என அழைக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் விற்பனை மட்டும் அதிகரித்துள்ளது.

சென்ற மாதம் பெட்ரோலியப் பொருட்கள் நுகர்வு 17.79% சரிவைச் சந்தித்தது.  இந்த மாதம் 15 ஆம் தேதி வரை மொத்தமாக 50% விற்பனை சரிவு ஏற்பட்டுள்ளது.  இதில் பெட்ரோல் விற்பனையில் 64%,  டீசல் விற்பனையில் 61% மற்றும் விமான எரிபொருள் விற்பனையில் 94% சரிவு ஏற்பட்டுள்ளது.  இது இந்திய வரலாற்றில் முதல் முறையாகும்.

அதே வேளையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விற்பனை இந்த 15 நாட்களில் 21% அதிகரித்துள்ளது.