நியூயார்க்
நியூயார்க் மாகாண தேர்தலில் முதல் முறையாக இரு கருப்பின ஓரின சேர்க்கையாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
அமெரிக்காவில் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதில் அதிபர் தேர்வில் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் மிகவும் நெருங்கிய வித்தியாசத்தில் உள்ளனர். இந்த தேர்தலில் பல மாகாணங்களில் முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் நியூயார்க் மாகாணத்தில் வெற்றி பெற்றுள்ள இருவர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார்கள்.
இதில் நியூயார்க் 17 ஆம் மாவட்டத்தில் மண்டேயர் ஜோன்ஸ் என்பவரும் 15 ஆம் மாவட்டத்தில் ரிட்சி டோரஸ் என்பவரும் வெற்றி பெற்றுள்ளனர். இதில் டோரஸ் லத்தின் வம்சாவழியினர் ஆவார். இவர்கள் இருவரும் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். மேலும் இருவரும் தாங்கள் ஓரின சேர்க்கையாளர்கள் என்பதை பகிரங்கமாக ஒப்புக் கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
டெமாக்ரடிக் கட்சியைச் சேர்ந்த இந்த இருவரும் தங்களை வெற்றியடையச் செய்த மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இவர்களது வெற்றியை சக உறுப்பினர்கள் மட்டுமின்றி ஓரின சேர்க்கையாளர் குழுக்களான கிலாட் மற்றும் மனித உரிமை பிரச்சாரகர்கள் ஆகியவையும் வரவேற்றுள்ளன.
தேசிய கறுப்பின நீதி இணையம் என்னும் அமைப்பின் நிர்வாக இயக்குநர் டேவிட் ஜோன்ஸ், “பிரதிநிதித்துவ அடிப்படையில் இவர்களது வெற்றி சரித்திர படைத்துள்ளது. உலகில் இருட்டில் உள்ள எங்கள் கருப்பினர்களுக்கு இவர்களது வெற்றி ஒரு ஜன்னலைத் திறந்து கண்ணாடியையும் அளித்துள்ளது. உலகில் ஒதுக்கப்பட்ட கறுப்பின மற்றும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு இவர்களது வெற்றி ஒரு நல்ல உதாரணம் ஆகும்” எனப் பதிந்துள்ளார்.