டெல்லி: 18-ஆவது மக்களவையின் முதல் கூட்டத் தொடரின் முதல் அமர்வு ஜூன் 24-ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, ஜூன் 24ந்தேதி முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெறும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.
18வது மக்களவைக்கான தேர்தல் 7கட்டங்களாக நடந்து தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. தேசிய கட்சிகளான பாஜக 240 தொகுதிகளை கைப்பற்றிய நிலையில், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களை கைப்பற்றியது. அதே வேளையில், காங்கிரஸ் கட்சி வெறும் 99 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், 28 கட்சிகளை கொண்ட இண்டியா கூட்டணியும் 234 தொகுதிகளை மட்டுமே கைப்பற்ற முடிந்தது. இது பாஜகவின் வெற்றியை விட குறைவு.
இதையடுத்து பாஜக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. ஜுன் 9ந்தேதி இரவு பிரதமராக மோடி பதவி ஏற்றார். அவருடன் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகளைச்சேர்ந்த 72 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். அவர்களுக்கு டியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார்
இதையடுத்து, மக்களவை தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் எம்.பி.க்களாக பதவி ஏற்கும் வகையில் நாடாளுமன்ற மக்களவை கூட்டப்படுகிறது. அதன்படி, 18-ஆவது மக்களவை கூட்டத் தொடரின் முதல் அமர்வு குடியரசுத் தலைவர் மற்றும் சபாநாயகர் உரையுடன் ஜூன் 24-ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கூட்டத்தொடரில் நாடு முழுவதும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினருகளுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும் எனவும், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினர்கள் 2 நாட்கள் பதவியேற்பார்கள். உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். ஜூன் 26ம் தேதி மக்களவை சபாநாயகர் தேர்தல் நடைபெறும். 27ல் நாடாளுமன்ற இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தொடர் ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ தெரிவித்துள்ளார்.