சென்னை:  தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வில், முதற்கட்ட பொறியியல் கலந்தாய்வு நிறைவு பெற்றுள்ளது. மொத்த முள்ள  430 பொறியியல் கல்லூரிகளில் 193 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொறியியல் படிப்புக்கான தேவை அதிகரித்த நிலையில், கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் மூலை முடுக்கெல்லாம் பொறியியல் கல்லூரிகள் தோன்றின. முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், அரசியல் கட்சியினர்களே கல்லூரிகளை தொடங்கி வசூலி வாரி குவித்து வந்தனர். ஆனால், சமீப ஆண்டுகளாக பொறியியல் மோகம் குறைந்துள்ள நிலையில், ஏற்கனவே நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டன. அவற்றில் சில கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றப்பட்டு, செயல்பட்டு வருகின்றன.

இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு , அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 430 கல்லூரிகள் உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் நடப்பாண்டு,  ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 378  இடங்கள் நிரப்பப்பட உள்ளன.

ஏற்கனவே பொறியியல்படிப்புப்பான விண்ணப்பம் பெறப்பட்டு, தர வரிசை பட்டியல் வெளியிடப்பட்டு முதல்கட்ட கலந்தாய்வு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தற்போது 2வது கட்ட கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில்,  பொறியியல் முதற்கட்ட கலந்தாய்வு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதில், மொத்தமுள்ள 430 பொறியியல் கல்லூரிகளில்,  193 கல்லூரிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை என்பது தெரிய வந்துள்ளது.

மேலும், மொத்தமுள்ள 430 கல்லூரிகளில்,   20 கல்லூரிகளில் மட்டும் 50 சதவீத மாணவர்கள் சேர்ந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.