ஜெட்டா

முற்றிலும் பெண்களுக்கான கார் விற்பனை கண்காட்சி சவுதியில் முதன் முதலாக ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

உலகில் உள்ள அனைத்து நாடுகளில் இது வரை சவுதி அரேபியாவில் மட்டுமே பெண்கள் வாகனம் ஓட்டுவது தடை செய்யப்பட்டிருந்தது.   கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சவுதி அரேபிய அரசர் சாலமன் ஒரு அறிவிப்பு வெளியிட்டார்.   அதன்படி வரும் ஜூன் மாதம் முதல் அந்நாட்டில் பெண்களுக்கு வாகனம் ஓட்ட அனுமதி வழங்கப்படும் என அறிவித்தார்.   இது உலகெங்கும் உள்ள பெண்ணிய ஆர்வலர்கர்களின் பாராட்டை பெற்றது.

தற்போது பெண்களுக்கான பிரத்யேக வாகனக் கண்காட்சி நடைபெற்றுள்ளது.   ஜெட்டாவில் உள்ள லீ மால் எனப்படும் ஷாப்பிங் மாலில் நடைபெற்ற இந்தக் கண்காட்சிக்கு திரள் திரளாக பெண்கள் வருகை தந்தனர்.   அந்த வளாகம் முழுவதும் வண்ணமயமான பலூன்களால் அலங்கரிக்கப் பட்டிருந்தது.   பெண்கள் அங்குள்ள வாகனங்களின் முன்னால் நின்று செல்ஃபி எடுத்து கொண்டாடி உள்ளனர்.

சவுதியில் ஜனவரி முதல் பெட்ரோலியப் பொருட்களுக்கு வாட் விதிக்கப்பட்டதால் எரிபொருள் விலை அதிகமாகி உள்ளது.   அதை ஒட்டி இந்த கண்காட்சியில் எரிபொருள் தேவை குறைவாக உள்ள வாகனங்களை பலரும் தேர்ந்தெடுத்துள்ளனர்.  அத்துடன் விற்பனையாளராக உள்ள பெண்களும் இதற்கு உதவி செய்துள்ளனர்.

இந்த கண்காட்சியில் உள்ள அனைத்து பணிகளையும் பெண்களே செய்துள்ளனர்.   விற்பனை மட்டும் இன்றி காசாளராகவும் மற்றும் அந்த மாலில் உள்ள உணவகங்களில் பணியாளராகவும் பெண்களே பணி புரிந்துள்ளனர்.    இஸ்லாமிய நாடான சவுதியில் இது போல முழுதும் பெண்களே பணியாற்றுவதும் முதல் முறை என கூறப்படுகிறது.