First direct London-China train completes 12,000km-run
லண்டனில் இருந்து சீனா வரையிலான 12.500 கி.மீ தொலைவுள்ள வழித்தடத்தில் சரக்கு ரயிலை வெற்றிகரமாக இயக்கி சாதித்துள்ளது சீனாவின் ரயில்வே துறை.
சீனா ரயில்வே கார்ப்பரேஷனின் ஈஸ்ட் விண்ட் சரக்கு ரயில் கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி லண்டனில் இருந்து புறப்பட்டது. 20 நாள் பயணத்திற்குப் பின்னர் சீனாவின் முக்கிய வர்த்தக நகரமான ‘யிவு’வை சனிக்கிழமை வந்தடைந்தது. 18 நாட்களில் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூடுதலாக இரண்டு நாட்கள் ஆகியுள்ளதாக சீன ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விஸ்கி, மருந்துப் பொருட்கள் என பல்வேறு சரக்குகள் இந்த ரயில்மூலம் வந்து சேர்ந்துள்ளன.
மேற்கத்திய நாடுகளுடன் வர்த்தக தொடர்பை அதிகரிக்கும் நோக்கத்துடன் கடந்த 2013ஆம் ஆண்டு ‘ஒன் பெல்ட், ஒன் ரோடு’ (one belt one road) என்ற திட்டத்தை சீனா செயல்படுத்தத் தொடங்கியது. அதன்படி சீனாவில் இருந்து லண்டன் வரையிலான இந்த ரயில்பாதை அமைக்கப்பட்டது. பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்ட இந்த ரயில்பாதைக்கு சில்க் ரோடு என சீனா பெயரிட்டுள்ளது.
லண்டனில் இருந்து புறப்பட்ட இந்த சரக்குரயில், பிரான்ஸ், பெல்ஜியம், ஜெர்மணி, போலந்து, பெலாரஸ், ரஷ்யா மற்றும் கஜகஸ்தான் வழியாக சீனாவை வந்தடைந்துள்ளது. சீனாவில் இருந்து ஸ்பெயினின் மேட்ரிட் நகருக்கு கடந்த 2014 ஆம் ஆண்டு இயக்கப்பட்ட சரக்குரயில் தான் உலகிலேயே அதிக தொலைவைக் (13,500 கி.மீ) கொண்டது. அதற்கு அடுத்தபடியாக சீனாவின் யிவு நகரில் இருந்து லண்டன் வரையிலான இந்த ரயில் தடம் இரண்டாவது பெரிய தொலைவைக் கொண்டது என்ற சிறப்பைப் பெற்றுள்ளது.